மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலை மாயம் – அறநிலையத்துறை பெண் அதிகாரி வீட்டில் சோதனை

கபாலீஸ்வரர் கோவில் சிலை மாயம் தொடர்பாக அறநிலையத்துறை பெண் அதிகாரி வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு திருப்பணிகள் செய்யப்பட்டன.
அப்போது புன்னை வனநாதர் சன்னதி சிலை உள்பட 3 சிலைகள் மாற்றப்பட்டன.

சிலைகள் மாற்றப்பட்டதில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்று திடீர் ஆய்வு செய்தார்.
சிலை மாற்றம் செய்யப்பட்ட புன்னை வனநாதர் சன்னதி உள்பட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று பார்வையிட்டார். 3 சிலைகள் மாற்றப்பட்டது ஏன் என்று விசாரித்தார்.

இதைத் தொடர்ந்து பழைய மூன்று சிலைகளும் எங்கே, அந்த சிலைகளை என்ன செய்தீர்கள் என்று ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கேள்வி எழுப்பினார். அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. மாற்றப்பட்ட மூன்று பழைய சிலைகளும் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

இதற்கிடையே புன்னை வனநாதர் சன்னதி எதிரே இருந்த நந்தி சிலை மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் இருந்து மீட்கப்பட்டது. எனவே மாயமான 3 முக்கிய சிலைகள் புதைக்கப்பட்டு இருக்கலாமோ என்ற சந்தேகம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ஏற்பட்டது.

இதுதொடர்பாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலய இணை ஆணையர் காவேரி மற்றும் கூடுதல் ஆணையர் திருமகள் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரும் அதுபற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறி விட்டதாக தெரிகிறது.

இதையடுத்து 3 சிலைகளை மாற்றியது தொடர்பான ஆவணங்களை தருமாறு அறநிலையத்துறை அதிகாரிகளிடம், ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கேட்டார். ஆனால் அதற்கான ஆவணங்களையும் அறநிலையத்துறை பெண் அதிகாரிகளால் கொடுக்க இயலவில்லை.

இதனால் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலைகள் மாயமானதில் சிலை கடத்தல் தடுப்பு போலீசாருக்கு சந்தேகம் அதிகரித்துள்ளது. இது தொடர்பான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியிள்ளனர்.

இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) காலை வியாசர்பாடியில் உள்ள கூடுதல் ஆணையர் திருமகள் வீட்டுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சென்றனர். சுமார் 30 நிமிடங்கள் அவர்கள் அங்கு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் ஏதேனும் ஆவணங்கள் சிக்கியதா என்று தெரியவில்லை.

கூடுதல் ஆணையர் திருமகளிடமும் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. அவர் தெரிவித்துள்ள தகவல்களின் பேரில் மயிலாப்பூர் கோவில் சிலைகள் மாயமான விவகாரம் சூடுபிடித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top