காஷ்மீரில் அனைத்து தலைவர்களையும் சிறையில் அடைத்துவிட்டு பாஜக நடத்தும் ஜனநாயக விரோத தேர்தல்

ஜம்மு-காஷ்மீரில் நாளை நகராட்சி தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் மிர்வாயிஸ் உமர் பாரூக் இன்று வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்கள் கடைசியாக நடைபெற்றன. இந்த தேர்தல்களில் சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

இதைதொடர்ந்து, 2016-ம் ஆண்டில் நடக்க வேண்டிய தேர்தல் அப்போது புர்ஹான் வானி என்னும் இளைஞரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்ற பின்னர் ஏற்பட்ட பாதுகாப்பு படையினரின் கலவரம், வன்முறை மற்றும் அமைதியின்மையால் ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது, அங்கு பதற்றம் தணிந்து, இயல்புநிலை திரும்பியுள்ள நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நகராட்சி தேர்தல்களும், பஞ்சாயத்து தேர்தல்களும் நடத்த தேர்தல் கமிஷன் தீர்மானித்தது.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஷலீன் காப்ரா அறிவித்தார்.

இதேபோல், பஞ்சாயத்து தேர்தல்கள் நவம்பர் 17-ம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக நடைபெறவுள்ளது.
நவம்பர் 17, 20, 24, 27,29 மற்றும் டிசம்பர் 1,4,8,11 ஆகிய தேதிகளில் இந்த ஒன்பதுகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

காஷ்மீரை அதன் சொந்த மக்களிடமே தந்துவிடுங்கள் என்றும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளின் ஆக்கிரமிப்பை எதிர்த்தும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தலைவர்கள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

இதேபோல், தேசிய மாநாட்டு கட்சியின் நிறுவனர் பரூக் அப்துல்லாவும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார். உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தியும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜம்மு – காஷ்மீர் விடுதலை இயக்கத்தின் தலைவரான யாசீன் மாலிக் ஸ்ரீநகரின் அபி குஸார் பகுதியில் உள்ள அலுவலகத்தில் கடந்த இரண்டாம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை (8-ம் தேதி) தொடங்குவதால், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் மிதவாத ஹுரியத் மாநாட்டு கட்சி தலைவரான மிர்வாயிஸ் உமர் பாரூக் இன்று போலீசாரால் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டார்.

இதேபோல், ஹுரியத் மாநாட்டு கட்சி தலைவர் சையத் அலி ஷா கிலானியும் வீட்டுக் காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காஸ்மீர் விடுதலைக்காக அதன் ஜனநாயகத்திற்காக பாடுபடும் தலைவர்கள் எல்லோரையும் சிறையில் அடைத்துவிட்டு பாஜக அரசு நடத்தும் இந்த உள்ளாட்சி தேர்தல் யாருக்கான விடிவை தந்துவிடும். காஸ்மீர் மக்களை தொடர்ந்து துப்பாக்கி முனையில் வைத்துக்கொண்டு இப்படி தேர்தலை நடத்துவது கண்டிக்கத்தக்கது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top