இந்தியாவில் முஸ்லிம்கள் இல்லாமல் இந்துத்துவா கோட்பாடே இல்லை: ஆர்எஸ்எஸ் தலைவர்

இந்தியாவில் முஸ்லிம்கள் இல்லாமல் இந்துத்துவா என்ற கோட்பாடே இல்லை. இந்துத்துவா என்பது சகோதரத்துவத்தையும், வேற்றுமையில் ஒற்றுமையையும் குறிப்பிடுவதாகும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசி உள்ளார்

ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் மாநாடு டெல்லியில் நடந்து வருகிறது. டெல்லி விஞ்ஞான் பவனில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ‘எதிர்கால பாரதம்: ஆர்எஸ்எஸ் கண்ணோட்டம்’ என்ற தலைப்பில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:

இந்தியாவில் வாழும் மக்கள் அனைவருக்கும் இந்துத்துவா என்பது அடிப்படையான தத்துவம். இந்துத்துவா என்பது சகோதரத்துவத்தையும், வேற்றுமையில் ஒற்றுமை, தியாகம், சுயஅடக்கம், நன்றி செலுத்துதல் ஆகிய குணங்களைத்தான் வலியுறுத்துகிறது.

ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் ஆர்எஸ்எஸ் அமைப்பு பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்வதாகவும், ஒரே மாதிரியான கொள்கையை உண்டாக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டுகின்றன.

ஆனால், எங்களைப் பொறுத்தவரை இந்த நாட்டில் முஸ்லிம்கள் இல்லாமல், இந்துத்துவா என்பதே இல்லை. முஸ்லிம்களை ஒதுக்கிவைத்துவிட்டு, இந்துத்துவா இருக்க முடியாது. அனைத்து மதங்களையும், நம்பிக்கைகளையும் உள்ளடக்கியதுதான் இந்துராஷ்டிரம்.

அரசியல் கட்சிகள் பல்வேறு கொள்கைகளைப் பின்பற்றலாம். ஆனால், நட்புணர்ச்சி என்ற ஒரு தன்மையை மறந்துவிட்டால், பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு இட்டுச் செல்லும்.

ஆர்எஸ்எஸ் அமைப்பு எப்போதும் சகோதரத்துவம் பேணவே உழைக்கிறது, வேற்றுமையில் ஒற்றுமை என்பதை வலியுறுத்துகிறது. இதுதான் எங்களுடைய தத்துவம் கொள்கை, இதைத்தான் உலகமே இந்துத்துவா என்று அழைக்கிறது.

உலகமே ஒரு குடும்பம் போன்றது. நாங்கள் வேதங்கள் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும், புத்த மதம் பின்பற்றக்கூடாது என்று நாங்கள் கூறியிருந்தால் அது இந்துத்துவா அல்ல.

அரசியலமைப்புச் சட்டம் கூடுதல் அதிகாரம் கொடுத்திருப்பதுபோல் ஆர்எஸ்எஸ் அமைப்பு இயங்குவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டுகிறது. அரசியலமைப்புச் சட்டம் என்பது அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவானது. அனைவருக்கும் சமமான உரிமையை வழங்கி இருக்கிறது, அனைவரும் பின்பற்ற வேண்டும். அதை ஆர்எஸ்எஸ் அமைப்பு தீவிரமாகப் பின்பற்றுகிறது.

ஆர்எஸ்எஸ் அமைப்பு நாட்டுக்காகவும், நாட்டை முன்னேற்றவும், வளமானதாக்கவும் உழைக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பு ஒருபோதும் அரசியலுக்குள் பங்கேற்காது. அப்படியென்றால், அரசியல் தொடர்பான பார்வை இருக்கக்கூடாது என்பதல்ல. தேசிய அளவிலான கொள்கையில் எங்களின் பார்வையை, கருத்துகளை, கொள்கைகளை நாங்கள் வெளிப்படுத்துவோம். ஆனால், ஒருபோதும் ஆர்எஸ்எஸ் அமைப்பு மத்திய அரசில் தலையிட்டது இல்லை.

மத்தியில் ஆள்பவர்களுக்கு சங் பரிவார் அமைப்புகளின் ஆலோசனை தேவையில்லை. எங்களின் ஆலோசனையையும் அவர்கள் சார்ந்தில்லை, நாங்கள் ஆலோசனையும் கொடுக்கவில்லை. அவர்களுக்கு ஆலோசனை தேவைப்பட்டால் எங்களிடம் கேட்பார்கள். எங்களுக்கு ஆலோசனை வழங்க விருப்பம் இருந்தால், நாங்கள் கூறுவோம். ஆனால், ஒருபோதும் அரசின் கொள்கையில் தலையிட்டது இல்லை”.
இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.

“வடமாநிலங்களில் பாஜகவிற்கு செல்வாக்கு இறங்கு முகமாக இருக்கிறது. 2019 தேர்தலில் வென்றாகவேண்டிய பொறுப்பு ஆர்.எஸ்.எஸ் க்கு இருப்பதால் நல்லவர்கள் போல் வேடமிடுகிரார்கள். ஆர்.எஸ்.எஸ் சின் இந்த பேச்சை யாரும் நம்ப தயாரில்லை” என சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top