காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்; இரு தினங்களுக்கு மழை வாய்ப்பு; வானிலைஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்து வரும் இரு தினங்களில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், “கிழக்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது அடுத்து வரும் 24 மணிநேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும். தொடர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறக்கூடும். இதன்காரணமாக தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் இன்று மாலை முதல் பலத்த காற்று அதாவது மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்தில் வீசும். நாளை 65 முதல் 75 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் அந்தமான் மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் 19, 20 தேதிகளிலும், ஆந்திரா மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் 19, 20, 21 ஆகிய தேதிகளிலும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அடுத்து வரும் இரு தினங்களைப் பொறுத்தவரையில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில் சிலமுறை மிதமான மழை பெய்யக்கூடும். மத்திய வங்கக் கடல் பகுதியில் உருவாகி வலுப்பெற்று ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவை நோக்கி இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் செல்வதால் இதனால் தென்தமிழகத்தில் மழை இல்லை.

கடந்த 24 மணிநேரத்தைப் பொறுத்தவரையில் செம்பரம்பாக்கம், புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் 4 செமீ மழையும், விழுப்புரம் மாவட்டம் வானூர், மரக்காணம், செஞ்சி, மதுராந்தகம், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி, பூந்தமல்லி, சோழவரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஆகிய பகுதிகளில் 3 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

ஜூன் 1 முதல் இன்றுவரை 235 மிமீ மழை பதிவாகியுள்ளது. இந்தக் காலகட்டத்தின் இயல்பு அளவு 272 மிமீ. இது 14 சதவீதம் குறைவு” என பாலச்சந்திரன் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top