தேசிய வங்கிகளை இணைக்கும் திட்டம்; பொருளாதாரத் தற்கொலைக்கு சமம்: திருமாவளவன் அறிக்கை

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனக் கூறி இருக்கிறார்

இதுதொடர்பாக தொல்.திருமாவளவன் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளான விஜயா வங்கி, தேனா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா ஆகிய மூன்றையும் ஒரே வங்கியாக இணைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. வங்கி ஊழியர்களின் விருப்பத்தைக் கேட்காமல் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு கண்டனத்துக்குரியது. இந்த அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைத்து ஒரு சில பெரிய வங்கிகளாக உருவாக்கும் திட்டத்தைக் கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய அரசு வெளிப்படுத்தி வந்தது. ஆனால், அப்படிச் செய்வது வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட நோக்கத்தைக் கெடுத்துவிடும். கிராமப்புறங்களுக்கும் ஏழை, எளிய மக்களுக்கும் வங்கிச் சேவை கிடைப்பதை தடுத்துவிடும் எனப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் விஜயா வங்கி, தேனா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா ஆகியவற்றை ஒன்றிணைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது விஜய் மல்லையாவை தப்பிக்கவிட்ட பிரச்சினையிலிருந்து நாட்டு மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவே இந்த அறிவிப்பு இப்போது செய்யப்பட்டிருப்பதாகக் கருத வேண்டியுள்ளது.

தற்போது இணைக்கப்படும் மூன்று வங்கிகளில் இரண்டு வங்கிகள் கடுமையான நஷ்டத்தில் இயங்கி வருபவை. தேனா வங்கியின் வாராக் கடன் அளவு மிக அதிகமாக இருப்பதால் அது ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கிறது. அதை விட சற்றே லாபத்தில் இயங்கி வரும் பேங்க் ஆஃப் பரோடா வங்கியுடன் இணைப்பதால் அந்த வங்கியும் பின்னடைவுக்கு ஆளாகும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கெனவே அதன் பங்குகளின் மதிப்பு சரியத் தொடங்கிவிட்டது.

வங்கிகளை இணைப்பதற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள்கூட லாபத்தில் இயங்கும் வங்கிகளை இணைக்க வேண்டும் என்று தான் கூறி வருகின்றனர். அதற்கு நேர்மாறாக மத்திய அரசு இந்த அறிவிப்பைச் செய்துள்ளது. மீண்டும் ஒரு பொருளாதார மந்தநிலை 2020 ஆம் ஆண்டில் உருவாகும் எனவும் அதனால் இந்தியா போன்ற வளரும் பொருளாதார நாடுகளின் பண மதிப்பு வீழ்ச்சி அடையும் என்றும் உலகப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை ஒரு பொருளாதாரத் தற்கொலைக்குச் சமமமாகும்.

பணமதிப்பு அழிப்பு நடவடிக்கையை எடுத்து மிகப்பெரிய பொருளாதார சீர்குலைவுக்குக் காரணமாக இருக்கும் பாஜக அரசு தற்போது பொதுத்துறை வங்கிகளை ஒழித்துக்கட்ட முற்பட்டுள்ளது. இதைத் தடுத்து நிறுத்த அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும்” என தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top