குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும்;திருமாவளவன் அறிக்கை

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஹெச்.ராஜாவை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என, அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

இன்று தொல்.திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டின் அமைதியைச் சீர்குலைத்து மதவாத வன்முறையைத் தூண்டும் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டின் அமைதியைக் கெடுத்து வகுப்புக் கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் லாபம் அடையலாம் என ஹெச்.ராஜா முயற்சித்து வருகிறார். வெட்டுவோம், கொலை செய்வோம், தலையை எடுப்போம் என்றெல்லாம் சட்ட விரோதமாகப் பொதுக் கூட்டங்களில் அவர் பேசி வருகிறார். பெரியாரின் சிலையை உடைக்க வேண்டுமென்று அவர் பேசியதையொட்டி சிலை உடைக்கப்பட்டு பெரும் பதற்றம் ஏற்பட்டதை அனைவரும் அறிவோம்.

வைரமுத்துவின் தலையை வெட்ட வேண்டுமென்று பகிரங்கமாகப் பேசி கலவரத்தை ஏற்படுத்த அவர் முயற்சித்தார். இப்படி ஒவ்வொரு நாளும் போகிற இடமெல்லாம் கலவரத்தைத் தூண்டி வருகிறார். அவரது பேச்சின் காரணமாகவே தென்காசியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது கலவரம் ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருமயத்தில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கூட்டமும் ஊர்வலமும் நடத்த முயற்சித்து கலவரத்தை மூட்டியுள்ளார். உயர் நீதிமன்றத்தையும் காவல்துறையையும் சொல்லத் தகாத வார்த்தைகளால் அவர் வசை பாடிய வீடியோ சமூக ஊடகங்களிலும், காட்சி ஊடகங்களிலும் கடந்த இரண்டு நாட்களாகப் பரவி வருகிறது. அவர் மீது திருமயம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இதுவரை அவரை போலீஸார் கைது செய்யவில்லை. நீதிமன்றத்தின் மாண்பைக் காக்கவும் காவல்துறையினரின் கடமையுணர்வு குன்றாமல் தடுக்கவும் தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் அவரைக் கைது செய்ய வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் எதுவும் வழங்கக்கூடாது என்று வலியுறுத்துகிறோம். தொடர்ந்து அமைதியைச் சீர்குலைக்கும் ஹெச்.ராஜாவை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டுமெனத் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

பெரியாரின் பிறந்த நாளான இன்று அவரது உருவச்சிலைக்கு மரியாதை செய்யப் பலரும் கூடியிருந்த நேரத்தில் அவர்களின் கண் முன்பாகவே சென்னையில் உள்ள தந்தை பெரியார் சிலையை சனாதன பயங்கரவாதி அவமதித்துள்ள செயல் அதிர்ச்சியளிக்கிறது. அவரைப் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்” என தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top