சிலைக்கடத்தல் வழக்கு ஆவணங்களை மத்திய அரசுக்கு கொடுக்க தமிழகஅரசு நிர்பந்தம்;விசாரணை தள்ளிவைப்பு

சிலைக்கடத்தல் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் கேட்பதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களில் இருந்து, புராதான சாமி சிலைகள் பல கொள்ளை அடிக்கப்பட்டது. சர்வதேச சிலைக் கடத்தல் கும்பல்களுடன் கை கோர்த்து, இந்த கொள்ளை சம்பவத்தில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் செயல்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன், இந்த சிலைக் கடத்தல் வழக்குகளை எல்லாம் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரிக்க உத்தரவிட்டார்.

இந்த சிலை கடத்தல் வழக்கில், அரசு தலைமை ஸ்தபதி முத்தையா, இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா உள்பட பல முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் பலரை கைது செய்ய பொன்.மாணிக்கவேல் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், தமிழக அரசு திடீரென அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

‘இந்த சிலைக் கடத்தல் வழக்குகள் அனைத்தையும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவதாக கூறி, அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர், அரசாணைக்கு தடை விதித்தனர். இந்த வழக்கிற்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், ‘சி.பி.ஐ. விசாரணைக்கு அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு மாற்றியுள்ளது தொடர்பான சில ஆவணங்களை மத்திய அரசு கேட்டுள்ளது’ என்றார்.

சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல் சீனிவாசன், ‘தமிழக அரசு பிறப்பித்த அரசாணை சி.பி.ஐ. இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவையெல்லாம் பரிசீலனையில் உள்ளன’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘ஒருவேளை சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்க சி.பி.ஐ. மறுத்து விட்டால், என்ன செய்வீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரவிந்த் பாண்டியன், ‘சி.பி.ஐ. மறுக்கவில்லை. முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) உள்ளிட்ட சில ஆவணங்களை கேட்டு தான் கடிதம் அனுப்பியுள்ளது. இந்த கடிதம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் நாளை (புதன்கிழமை) தாக்கல் செய்கிறேன்’ என்றார்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top