7 தமிழர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை ஒரு பரிந்துரையை ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளது. அதை அவர் அமல்படுத்த வேண்டும். அதுதான் சட்டம். இதற்காக யாரிடமும் அவர் ஆலோசனை கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொரப்ஜி கூறியுள்ளார்.
ஒரு தொலைக்காட்சிக்கு அவர் அளித் பிரத்யேக பேட்டியில் அவர் இதை தெளிவுபடுத்தியுள்ளார். தமிழக அமைச்சரவை முடிவை ஆளுநர் அமல்படுத்த வேண்டும் என்பதையும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், 28 வருடமாக இவர்கள் சிறையில் உள்ளனர். இதை கருத்தில் கொள்ள வேண்டும். மிக நீண்ட காலம் இது. இதை கருத்தில் கொண்டு மனிதாபிமானத்துடன் முடிவெடுக்க வேண்டும். நிரந்தரமாக அவர்களை சிறையில் வைப்பது நியாயம் இல்லை, மனிதாபிமான செயலும் இல்லை.
மேலும், தமிழக அமைச்சரவை தனது அதிகாரத்தைப் (அரசியல் சட்டப் பிரிவு 161) பயன்படுத்தி ஒரு தீர்மானத்தைப் போட்டுள்ளது. அந்த தீர்மானத்தைப் போட அமைச்சரவைக்கு அதிகாரம் உண்டு. இதை ஆளுநர் ஏற்க வேண்டும். அதைத்தான் சட்டமும் சொல்கிறது.
இதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் என்றில்லை, எந்த அமைச்சகத்தின் ஆலோசனையையும் ஆளுநர் பெறத் தேவையில்லை, அவசியமும் இல்லை.அமைச்சரவையின் முடிவைத்தான் ஆளுநர் கேட்க வேண்டும். அமல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் சோலி சொரப்ஜி.
சோலி சொரப்ஜியின் கருத்தானது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கும் ஆளுநர் இடையூறாக இருக்க முடியாது, கூடாது என்பதை வலியுறுத்துவதாக உள்ளது.