சேலம்-சென்னை 8 வழிச்சாலை எதிர்ப்பு; விவசாயிகளை சந்திக்க வந்த யோகேந்திர யாதவ் கைது!

திருவண்ணாமலை அருகே சேலம்-சென்னை 8 வழிச்சாலை எதிர்ப்பு விவசாயிகளை சந்திக்க சென்ற ஸ்வராஜ் இந்தியா கட்சி தலைவர் யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்டார். அவர் செல்போன் பறிக்கப்பட்டது இந்த சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்ச்சியையும் தலைகுனிவையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை-சேலம் நடுவே அமைக்கப்பட உள்ள ரூ.1000 கோடி மதிப்பிலான 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகளை சந்திக்க யோகேந்திர யாதவ் இன்று சென்றார்.

செங்கம் காவல் நிலைய எல்லையில் வைத்து அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருடன் யோகேந்திர யாதவும், தொண்டர்களும் வாக்குவாதம் நடத்தினர். இதை செல்போனில் வீடியோவாக எடுத்த தொண்டர்கள் தள்ளிவிடப்பட்டனர். யோகேந்திர யாதவை கைது செய்த போலீசார் அவரை போலீஸ் வேனில் தள்ளிவிட்டதாகவும், செல்போனை பறித்துக் கொண்டதாகவும், தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் பதிந்துள்ளார்.

திருவண்ணாமலை போலீஸ் எஸ்.பி. எனக்கு அனுமதி மறுத்தார். சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்கிறார். நான் விவசாயிகளின் வீடுகளுக்கே சென்று உள்ளே இருந்தபடிதான் பேச உள்ளேன். சட்டம் ஒழுங்கு இதனால் எப்படி பாதிக்கப்படும்? காந்தியின் ஒத்துழையாமைதான் இதை எதிர்கொள்ள ஒரே வழி. இவ்வாறு ஒரு ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மற்றொரு ட்வீட்டில், 4 மணி நேரமாக ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளோம். அதிகாரப்பூர்வமாகவோ, வாய்மொழியாகக் கூடவோ, நாங்கள் கைது செய்யப்பட்டுள்ளோமா இல்லை என்பது கூட தெரிவிக்கப்படவில்லை. என்னை சந்தித்த 9 விவசாயிகளும், சந்திக்க காத்திருந்த 40 விவசாயிகளும் கூட கைது செய்துள்ளனர். இங்கு சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா, போலீஸ் ராஜ்யம் நடக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

யோகேந்திர யாதவ் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பிரிந்து ஸ்வராஜ் இந்தியா கட்சியை துவங்கியவர். விவசாயிகளுக்கான போராட்டங்களை முன்னெடுத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது .


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top