சென்னையின் நீர்நிலைகள் மீதான ஆக்கிரமிப்பை 8 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும்: உயர் நீதிமன்றம்

சென்னையின் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களுக்குள் அகற்ற போலீஸார் பாதுகாப்பு வழங்கவேண்டும். நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம் என மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அயனாவரத்தில் குளத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வரும் சுமார் 10 பேர் 2008-ம் ஆண்டு நிலம் இல்லாத ஏழைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் தங்கள் வசித்துவரும் வீடுகளுக்கு பட்டா வழங்க கோரி அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

ஆனால் பட்டா வழங்க அதிகாரிகள் மறுத்து உத்தரவு பிறப்பித்தனர். அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து 10 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களது கோரிக்கை மனுக்களில், தாங்கள் 25 முதல் 60 ஆண்டுகாலம் அப்பகுதியில் வசித்து வருவதாகவும், தங்களுக்கு இடங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர்.

அந்த வழக்கில், மனுதாரர்கள் பட்டா கேட்கின்ற இடம் அரசுக்கு சொந்தமான குளம் என்பதால் வீட்டுமனைப்பட்டா வழங்க முடியாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், 2008-ம் ஆண்டு நிலம் இல்லாத ஏழை மக்களுக்கு வீட்டுமனை வழங்கும் திட்டம் 10 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர முடியாது என குறிப்பிட்டார்.

பின்னர் நீதிபதி தனது உத்தரவில், “அரசு நிலத்தையும் நீர்நிலைகளையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்பதால், இலவச பட்டா வழங்க உத்தரவிட முடியாது. நீர்நிலைகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பது அதிகரித்து வருகிறது. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டால் குறிப்பிட்ட அந்த பகுதியை மட்டும் நீக்கிவிட்டு அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகின்றனர்.

அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் அதிகாரிகள் கடமை தவறுகின்றனர். அரசு நிலங்கள் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை.
சிறு மழைக்கே சென்னை நகரம் வெள்ள பாதிப்பை எதிர்கொண்டு வரும் நிலையில் இதற்கு காரணம் மனிதன் தவறு என நிபுணர்கள் சுட்டிக் காட்டியும் அதிகாரிகள் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை.

நீர்நிலை ஆக்கிரமிப்பு கொடுங்குற்றம் அதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டும் போதாது சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீர்நிலைகளில் ஆக்கிரமித்து வீடு கட்டி கொண்டிருப்பவர்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்க கூடாது என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழக வருவாய் துறை செயலாளர் அறிவுறுத்த வேண்டும்.

மேலும் மாவட்ட ஆட்சியர் இரண்டு வாரங்களில் ஆய்வுக் கூட்டம் நடத்தி, அதில் சென்னையில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை எட்டு வாரங்களில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல் மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும்ப்போது அதற்கு தேவையான பாதுகாப்புகளை மாநகர காவல் ஆணையர் வழங்க வேண்டும்.” என்று உத்தரவிட்ட நீதிபதி “இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து 12 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.” என்று உத்தரவிட்டார்.

சாதாரண ,எளிய மக்கள் வாழும் குடிசை பகுதிகளை இவ்வளவு அவசரமாகவும் கோபத்தோடும் அகற்ற ஆணையிடும் உயர்நீதிமன்றமும் அகற்ற தயாராகும் அதிகாரிகளும் சென்னையில் நீர்நிலைகளில் ஆக்கிரமித்து பெரிய கட்டிடங்களை எழுப்பி வணிகம் செய்யும் கார்பரேட் நிறுவனங்களை உடனடியாக அகற்றுவார்களா? பணக்காரர்களை விரட்டுவார்களா? என சமூக ஆர்வலர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் இல்லைதான்!


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top