ஜாதகத்தில் சிறை தோஷமா! உடனே உத்தரபிரதேசம் சென்றால் அரசு செலவில் ‘லாக்-அப்’ பரிகாரம்

பகுத்தறிவற்ற உத்தரபிரதேச மாநிலத்தின் பரிதாபநிலையைக்கண்டு மக்கள் வெட்கி தலைகுனிகின்றனர். ஜாதகத்தில் உள்ள ‘சிறை தோஷத்தை’ போக்க, போலீஸ் நிலைய ‘லாக்-அப்’பில் இருந்தால் ஆபத்து நீங்கிவிடும் என்று உத்தரபிரதேச மாநிலம் லக்னோ வில் உள்ள பலர் நம்புவதால் அந்த மாவட்ட கலெக்டரே மக்களை சிறை வைக்கிறார்.

உத்தரபிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் ஜாதகத்தின் மீது பலர் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். ஜாதகத்தைப் பார்த்துவிட்டு ஜோதிடர் கூறும் பரிகாரங்களை அப்படியே அவர்கள் செய்கின்றனர். கோம்திநகரைச் சேர்ந்தவர் ரமேஷ் சிங். 38 வயது தொழிலதிபர். இவர் தனது ஜாதகத்தில் உள்ள ‘சிறை தோஷத்தை’ போக்க கடந்த மே மாதம் உள்ளூர் போலீஸ் நிலையத்தில் உள்ள ‘லாக்-அப்’பில் ஒரு நாள் இருந்துள்ளார்.

இதுகுறித்து ரமேஷ் சிங் கூறியதாவது:
எங்கள் குடும்ப ஜோதிடர், என்னுடைய ஜாதகத்தை தீவிரமாக ஆய்வு செய்தார். அதில், குற்ற வழக்கில் நான் சிறை செல்லும் நிலை இருப்பதாகவும், அதனால் எதிர்கால வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படும் என்றும் கூறினார். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். அப்போது ஜோதிடரே பரிகாரமும் கூறினார்.

எந்தக் குற்றமும் செய்யாத நிலையில், சிறையில் சில மணி நேரம் இருந்தால் அந்த ஆபத்து நீங்கிவிடும் என்று தெரிவித்தார். அதன்பின், சிறை ‘லாக்-அப்’பில் ஒரு நாள் அனுமதிக்கும்படி என்னுடைய ஜாதகத்தின் நகலுடன் மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்தேன். விண்ணப் பத்தையும் ஜாதகத்தையும் நன்கு ஆராய்ந்த பிறகு மாவட்ட நிர்வாகமும் அனுமதி அளித்தது. அதன்பின் 24 மணி நேரம் உள்ளூர் போலீஸ் நிலையத்தில் உள்ள ‘லாக்-அப்’பில் இருந்தேன். ஜோதிடரின் அறிவுரைப்படி, விசாரணை கைதிகளுக்கு வழங்கப்படும் சாப்பாடு, தண்ணீரையே அருந்தினேன்.

அங்கிருந்த போது, என்னுடைய பாவங்களை மன்னித்து விடுங்கள். எந்தக் குற்றமும் செய்யாமல் சரியான பாதையில் நான் செல்ல உதவுங்கள் என்று கடவுளிடம் வேண்டினேன்.
இவ்வாறு ரமேஷ் சிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கவுஷல் ராஜ் சர்மா கூறும்போது, ‘‘இதுபோல் ஆண்டுதோறும் 24-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வருகின்றன. தங்களை ஒரு நாள் அல்லது 2 நாட்கள் ‘லாக்-அப்’பில் தங்க அனுமதிக்க வேண்டும் என்று விண்ணப்ப தாரர்கள் கோருகின்றனர். அவர்களுடைய ஜாதகத்தை நன்கு பரிசீலித்த பிறகு அனுமதி வழங்குகிறோம்’’ என்று எந்தவிதமான கூச்சமும் இன்றி சொல்கிறார்.

எந்த குற்றமும் செய்யாதவரை ‘லாக்-அப்’பில் அடைக்க சட்டத் தில் இடமில்லை. எனினும், சொந்த விருப்பத்தின்படி அவர்களுடைய கோரிக்கையை ஏற்கிறோம். இது முழுக்க முழுக்க மதரீதியிலானது என்று மாவட்ட அதிகாரிகள் கூறுகின்றனர்.

ரமேஷ் சிங்கைப் போலவே அன்கிட் சதுர்வேதி என்பவரும் கடந்த ஜனவரி மாதம் ஒரு நாள் ‘லாக்-அப்’பில் இருந்துள்ளார். அவர் கூறும்போது, ‘‘குறைந்த பட்சம் என்ன கிடைக்கிறதோ அதை வைத்து வாழ முடியும் என்ற மிக முக்கியமான தத்துவத்தை ‘லாக்-அப்’பில் புரிந்து கொண்டேன். தரையில் உறங்கினேன், அங்கிருந்த தண்ணீரை குடித்தேன். வெளியில் இருந்திருந்தால் அதை குடித்திருக்க மாட்டேன். அங்கு கொடுத்த உணவை திரும்பி கூட பார்த்திருக்க மாட்டேன். ஆனால், அதைச் சாப்பிட்டேன்’’ என்கிறார்.

உத்தரபிரதேசத்தில் ஜோதிடர்களுக்கு நல்ல கிராக்கி இருக்கிறது. உ.பி அரசும் ஜெயிலை தோஷம் கழிக்கும் கோயிலாக மாற்றுகிறார்கள்!


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top