ரோஹிங்கியா முஸ்லிம்கள் இனப்படுகொலை;வெளிக்கொண்டுவந்த 2 ராய்ட்டர்ஸ் நிருபர்களுக்கு மியான்மரில் சிறை

மியான்மரில் நடக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் இனப்படுகொலையை வெளி உலகிற்கு கொண்டு வந்த இரண்டு பத்திரிகையாளர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.

மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் சிறுபான்மையினராக வாழும் பூர்வ குடிமக்களான ரோஹிங்கியா முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். நீண்டகாலமாக வசித்து வரும் இவர்களுக்கு குடியுரிமை வழங்க அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது. அங்கு முஸ்லிம்களுக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்த மோதல் கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சகட்டத்தை எட்டியது. ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அவர்களது வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களும் நடந்தன. இதில் அந்நாட்டு ராணுவமும் முஸ்லிம்களுக்கு எதிராகத் தாக்குதலில் ஈடுபட்டது.

இதனால், அங்கிருந்து தப்பிய ரோஹிங்கியா முஸ்லிம்கள் பக்கத்து நாடான வங்கதேசத்தில் அகதிகளாகக் குடியேறி உள்ளனர்.

இந்த நிலையில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக மியான்மரில் நடந்த தாக்குதலையும், அதில் அந்த நாட்டு ராணுவத்தின் பங்கு இருந்ததையும் வெளிக்கொண்டு வந்த ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் இரு பத்திரிகையாளர்களுக்கு மியான்மர் நீதிமன்றம் 7 ஆண்டு சிறைத்தண்டணை விதித்துள்ளது.

ராய்ட்டர்ஸ் பத்திரிகை நிறுவனத்தைச் சேர்ந்த வோ லோன் (32) மற்றும் யாவ் சோ ஓ (28) ஆகிய இருவர் தற்போது சிறைத்தண்டணை பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து வரும் சனிக்கிழமை யாங்கோன் நகரில் பேரணி செல்வதாக அறிவித்துள்ளனர்.

தற்போது இவர்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தண்டணையை பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரான தண்டணை என்று உலகம் முழுவதும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூச்சியின் கீழ் இயங்கும் அரசு எவ்வாறு அநீதியாக நடந்து கொள்ளலாம் என்று தண்டனை விதிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளருக்கு ஆதரவாகக் குரல்கள் வலுத்து வருகின்றன.
மியான்மர் அரசு ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமை ஆணைய அமைப்பு கூறியிருந்தது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மியான்மர் அரசு மறுத்தது.

பத்திரிகையாளர்களுக்கு எதிராக அடக்கு முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னரும் மியான்மரில் உள்ள ரசாயன ஆயுதங்கள் தயாரிப்புத் தொழிற்சாலை குறித்த ஆய்வுத் தகவல்களை வெளியிட்ட, யுனைடட் வீக்லி நியூஸ் பத்திரிகையை சேர்ந்த நிறுவனருக்கு மியான்மர் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், அமைதிக்காக ஆங் சான் சூச்சி பெற்ற நோபல் பரிசை திருப்பி வாங்க வேண்டும் என்ற குரல் உலகமெங்கும் ஒலித்துக்கொண்டு இருக்கிறது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top