தலைமை நீதிபதி வீடு முற்றுகை; முன்னாள் போலீஸ் ஐஜி.க்கு தொடர்பு;உயர் நீதிமன்றம் நடவடிக்கை

முன்னாள் போலீஸ் ஐஜி சிவனாண்டிக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் வீட்டை வழக்கறிஞர்கள் முற்று கையிட்ட வழக்கில் தொடர்பு இருப்பதால், அந்த வழக்கை சிறப்பு அமர்வை உருவாக்கி உயர் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிர காஷ் பரிந்துரைத்துள்ளார்.

சென்னை மத்திய குற்றப்பிரிவில் பாண்டிராஜ் என்பவர் கடந்த 2015 ஏப்ரல் 2-ம் தேதி அளித்த புகாரில், “நான் ஒரு தனியார் நிறுவனத்தில் ரூ.50 லட்சம் முதலீடு செய்திருந்தேன். ஆனால், பங்குதாரர்கள் பெயரில் எனது பெயர் இடம்பெறவில்லை. எனது பணமும் திரும்ப வரவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டபோது அவர்கள் மிரட்டல் விடுத்ததோடு, காவல் துறையில் உயர் பொறுப்பில் இருப்பவர்களோடு தங்களுக்கு தொடர்பு இருக்கிறது. அதைப் பயன்படுத்தி என் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வைப்போம் என்றனர்” என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, பாண்டிராஜை முதலீடு செய்யுமாறு தூண்டிய சுஜை ஆனந்த், சைலஜா ரெட்டி, எஸ்.வி.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், சென்னை மத்திய குற்றப்பிரிவு முன்பு பாண்டிராஜ் ஆஜாராகியுள்ளார். விசாரணை முடிந்து திரும்பிய போது, அவரை 10 பேர் சேர்ந்து கடத்த முயன்றுள்ளனர். இதையடுத்து, அங்கிருந்து தப்பிய பாண்டிராஜ், வேப்பேரி காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், “குற்றம் சாட்டப்பட்டவர்களோடு தொடர்பில் உள்ள காவல்துறை அதிகாரி சிவனாண்டி, மத்திய குற்றப்பிரிவில் நான் அளித்த புகாரை திருப்பப் பெறவேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார். மேலும், ஆட்களை வைத்து கடத்தப் பார்த்தார்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த இரு வழக்குகளில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் சிலர், தங்களுக்கு முன்ஜாமீன் அளிக்கக்கோரி கடந்த 2015 ஏப்ரல் முதல் வாரத்தில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டுக்கு சென்றனர். அப்போது தலைமை நீதிபதி டெல்லி சென்றிருப்பதாக போலீஸார் கூறியும், வழக்கறிஞர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்து வீட்டை முற்றுகையிட்டனர்.

இந்நிலையில், மத்திய குற்றப் பிரிவில் முதலில் அளிக்கப்பட்ட மோசடி புகாரை போலீஸார் முடித்து வைத்தனர். அதைத்தொடர்ந்து, இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத் தில் பாண்டிராஜ் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் நேற்று பிறப்பித்த உத்தரவில், “மோசடி புகார் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை முடித்து வைத்த அறிக்கை ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கை மறு விசாரணை செய்ய சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் முன்னாள் போலீஸ் ஐஜி சிவனாண்டியின் செல்போன் அழைப்பு விவரங்களை பார்த்தபோது, அவர் தலைமை நீதிபதியின் வீடு முன்பு ரகளையில் ஈடுபட்ட 2 வழக்கறிஞர்களோடு தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. சிவனாண்டி போன்ற மூத்த போலீஸ் அதிகாரியின் பின்புலம் இல்லாமல் வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதியின் வீட்டை முற்றுகையிட்டிருக்க முடியாது. எனவே, தலைமை நீதிபதி வீட்டை முற்றுகையிட்டது தொடர்பான வழக்கு விசாரணையை கண்காணிக்க உயர் நீதிமன்றம் சிறப்பு அமர்வை அமைப்பது குறித்து தலைமை நீதிபதி பரிசீலிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top