இந்து மதவாதிகளால் ரவிக்குமார் உயிருக்கு ஆபத்து ; மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ

எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கும்பலைக் கண்டறிந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ரவிக்குமார் உயிருக்கு அச்சுறுதல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. முற்போக்கு சிந்தனையாளரும், எழுத்தாளருமான கௌரி லங்கேஷ், பெங்களூருவில் இந்துமத அடிப்படைவாத கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலை குறித்து விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வுக்குழு, கொலைக் குற்றவாளியின் நாட்குறிப்பைக் கைப்பற்றி இருக்கிறது.

கௌரி லங்கேஷ் கொலையை திட்டமிட்டு செய்த அமோல் காலே என்ற கொலைக் குற்றவாளியின் நாட்குறிப்பில் கௌரி லங்கேஷ் போன்று 34 பேரைக் கொல்வதற்குப் பட்டியல் தயாரித்து வைத்துள்ளனர். இதில் கர்நாடக மாநிலத்தில் 8 பேரும், இந்தியா முழுவதும் பிற மாநிலங்களில் 24 பேரும் கொலைப் பட்டியலில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன் அடிப்படையில் தான் மத்திய புலனாய்வுத் துறை தமிழக அரசுக்கு வழங்கி உள்ள அறிவுறுத்தலில், எழுத்தாளர் ரவிக்குமார் உயிருக்கு ஆபத்து என்று எச்சரிக்கை செய்துள்ளது.

பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த நான்கரை ஆண்டுகளாக இந்துத்துவ மதவெறி சக்திகள், கொலைவெறி கொண்டு அலைவதை நாடு முழுவதும் காண முடிகிறது. இந்துத்துவ கோட்பாட்டை எதிர்த்து கருத்துப் பரவலில் ஈடுபட்டு வரும் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பகிரங்கமாகவே மிரட்டப்படுவதோடு உயிருக்கும் உலை வைக்கும் போக்கு அதிகரித்து விட்டது.

நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்ற முற்போக்கு எழுத்தாளர்கள், இடதுசாரி கொள்கையாளர்கள் மதவெறி அமைப்புகளால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். எழுத்தாளர் ரவிக்குமார் கொள்கை அளவில் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் கூட்டத்தின் நோக்கங்களை விமர்சனம் செய்து வருகிறார். மத நல்லிணக்கத்தை சீரழித்து, பன்முகத்தன்மையை அழிக்கும் வகையில் வன்முறை வெறியாட்டம் போடும் இந்துத்துவ சக்திகள், ரவிக்குமார் போன்றவர்களுக்கு குறி வைத்து இருப்பதை மத்திய, மாநில அரசுகள் சாதாரணமாக கருதக் கூடாது.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உடனடியாக இதில் தலையிட்டு எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கும்பலை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும், புதுவை மாநில அரசும், எழுத்தாளர் ரவிக்குமாருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உடனடியாக ஏற்பாடு செய்திட வேண்டும்” என்று வைகோ தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top