யானைகள் வழித்தடத்தில் ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நீலகிரி மாவட்டம் மாயார் யானைகள் வழித்தடத்தில் மேலும் 10 ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் மாயார் பள்ளத்தாக்கு, சீகூர் பள்ளத்தாக்கு, சோலூர், மசினகுடி, உல்லத்தி, கடநாடு பஞ்சாயத்து ஆகியப் பகுதிகள் யானை அதிகம் நடமாடும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், மேற்கண்ட பகுதிகளில் சட்டத்துக்குப் புறம்பாக ரிசார்ட்டுகள், ஹோட்டல்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில், யானை வழித்தடங்களை வரையறை செய்து கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து ரிசார்ட் உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி.லோக்கூர், அப்துல் நசீர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, “யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள ரிசார்ட்டுகள் மீது பல்வேறு உத்தரவுகளை நீதிபதிகள் கடந்த 9-ம் தேதி பிறப்பித்தனர். யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள ஹோட்டல்கள், ரிசார்ட்டுகளின் உரிமையாளர்கள் தங்களின் ஆவணங்களை, அடுத்த 24 மணிநேரத்தில் மாவட்ட ஆட்சியரிடம் தாக்கல் செய்ய வேண்டும். அந்த ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்வார். அந்த ரிசார்ட்டுகள் சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டிருந்தால், ஆட்சியர் முடிவு எடுக்கலாம். சட்டத்துக்கு புறம்பாக, முன் அனுமதியில்லாமல் கட்டப்பட்டிருந்தால், அடுத்த 48 மணி நேரத்தில் தங்கும் விடுதிகளையும் மூடி சீல் வைக்க வேண்டும்” என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இதன் பேரில் மாயார் யானைகள் வழித்தடத்தில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் 48 மணிநேர அவகாசம் முடிந்த நிலையில் 12-ம் தேதி சீல் வைக்க பணி தொடங்கியது.

உதகை கோட்டாச்சியர் சுரேஷ் தலைமையில் சீல் வைக்கும் பணி நடந்து வருகிறது. டிஎஸ்பி சங்கு தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் பணி நடந்தது.

இந்த ரிசார்ட்டுகள் தவிர பிற 12 ரிசார்ட்டுகளின் ஆவணங்கள் சரிபார்க்கும் பணியை தனி குழு ஆய்வு செய்தது. இதில் 10 ரிசார்ட்டுகள் விதிகளை மீறி செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளதால், அவற்றுக்கும் சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top