கர்நாடகா, கேரளாவில் கனமழை; காவிரியில் தொடர்ந்து வெள்ள அபாயம் நீடிப்பு!

காவிரியில் தொடர்ந்து வெள்ள அபாயம் நீடித்து வருகிறது.மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1.70 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் வெள்ள ஆபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா, கேரளா மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது., நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 1.70 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 1 லட்சத்து 70,800 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120.240 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 93.85 டிஎம்சி-யாக உள்ளது.

கடந்த மூன்று நாட்களாக காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், எடப்பாடி – மேட்டூர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. காவிரி கரையோர பகுதியான பூலாம்பட்டி, கேனேரிப்பட்டி, மணக்காடு, காவிரிப்பட்டி அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50 வீடுகளுக்குள் ஆற்று வெள்ளம் புகுந்தது. இதனால், அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 250 ஏக்கர் விவசாய நிலத்தில் வெள்ளம் புகுந்து, பயிர்கள் சேதமடைந்தன. கர்நாடக மாநிலம் கேஎஸ்ஆர், கபினி அணைகளில் இருந்து 2.10 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில், மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், காவிரி கரையோரப் பகுதி மக்கள் வெளியேறி உறவினர்கள் வீடுகளிலும் அரசின் பாதுகாப்பு உதவி மையங்களிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்.

அணைகளிலிருந்து வெளியேறும் நீர் அதிகரித்து வருவதால் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. சேலம் ஆட்சியர் ரோஹிணி தலைமையிலானஅதிகாரிகள் மேட்டூர் இடது, வலது காவிரி கரைகளில் பாதுகாப்பை பலப்படுத்தியும், உயிர் காக்கும் கருவிகளுடன் மீட்பு படையினரை தயார் நிலையில் வைத்துள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை காவிரி ஆற்றின் நீர்வரத்து குறித்து தலைமை செயலக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top