4 வது நாளாக மீனவர்கள் தொடர் போராட்டம்

கேரள மாநிலம், கொச்சியில் படகு மீது கப்பல் மோதிய விபத்தில் மாயமான 9 மீனவர்களில் ஒருவரது உடல் நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், ராமன்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஏசுபாலன் என்பவருக்கு சொந்தமான ஓசியானிக் என்ற விசைப்படகில் ராமன்துறையைச் சேர்ந்த 7 மீனவர்கள் உட்பட 14 பேர், கடந்த 6ஆம் தேதி கேரள மாநிலம் முனம்பம் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் கடந்த 7-ம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் கொச்சின் பகுதியில் உள்ள ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அந்தவழியாக வந்த கப்பல் ஒன்று, படகின் மீது சரமாரியாக மோதி நிற்காமல் சென்று விட்டது.

இந்த விபத்தில் படகில் இருந்த ராமன்துறையை சேர்ந்த யாக்கோபு, யுகநாதன், முள்ளூர்துறையை சேர்ந்த சகாயராஜ் ஆகிய 3 மீனவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் கடலில் தத்தளித்த 2 மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில் விசைப்படகு உரிமையாளர் ஏசுபாலனின் உடல் மீனவர்களின் வலையில் அவரது உடல் சிக்கியது. உடனடியாக ஏசுபாலனின் உடல் எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு, அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஏசுபாலனுக்கு சுபா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இவரது இரண்டு சகோதரர்களும் படகு விபத்தில் சிக்கி மாயமாகிவிட்டதால் அவர்களது கதி என்னவென்று இதுவரை தெரியவில்லை.

இந்த நிலையில் விபத்து நடந்து 6 நாட்கள் ஆகிவிட்டதால் மற்ற 7 மீனவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று அஞ்சப்படுகிறது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கும்படி பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை, விஜயகுமார் எம்.பி. நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் ராமன்துறையில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினர் இன்று 4-வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குமரி மீனவர்களின் விசைப்படகு மீது மோதிய சரக்கு கப்பல் மீது அடையாளம் தெரியாத கப்பல் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், தாங்கள் அந்த கப்பல் பற்றிய அடையாளத்தை ஆதாரத்துடன் கொடுத்துள்ளதால் அடையாளத்தை குறிப்பிட்டு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரி இந்த போராட்டம் நடந்து வருவதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top