தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஐ.நா.வில் பேச்சு: பெங்களூரு விமானநிலையத்தில் திருமுருகன் காந்தி கைது

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழீழ இனப்படுகொலை குறித்தும் மற்றும் தமிழக மக்களின் பிரச்சனைகள் மற்றும் உரிமைகளுக்காக தொடர்ந்து போராட்டங்கள் மேற்கொண்டு வருகிறார். இவர் நடத்திய போராட்டங்கள் காரணமாக இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்சினை 100 நாட்கள் போராட்டமாக நடந்தது. 100 வது நாள் நிகழ்ச்சியில் பேரணியாக கலக்டர் அலுவலகம் நோக்கி மக்கள் பெருந்திரளாக சென்றனர்.

அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர், 50 பேர்வரை காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டவிதம் குறித்து அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.

திருமுருகன் காந்தி தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில் பதிவு செய்ய ஜெனிவா சென்று இருந்த அவர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து பேசினார்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் நடந்து வரும் மக்கள் போராட்டங்கள் குறித்து உலக நாடுகளின் கவனத்திற்கு எடுத்த செல்ல வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இது குறித்து பதிவு செய்யவும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில் பேசினார்.

ஸ்டெர்லைட் விவகாரம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சேலம்-சென்னை எட்டுவழிச்சாலை ஆகிய பிரச்னைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பேசிவிட்டு நார்வேயில் இருந்து இன்று அதிகாலை 3.45 மணிக்கு பெங்களூரு விமானநிலையம் வந்தடைந்தார். அப்போது அவரை தடுத்த விமான நிலைய காவலர்கள் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளதாகக் கூறி விமானநிலையத்தில் சிறைப்பிடித்துள்ளனர்.

இந்த கைது தொடர்பாக விசாரித்ததில் சென்னை வேப்பேரி, மைலாப்பூர் காவல்நிலையத்தில் அவருக்கு எதிராக 124 (A) தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.தற்போது தமிழ்நாடு காவல்துறை திருமுருகன் காந்தியை கைது செய்ய பெங்களூரு விரைந்துள்ளனர்.

இதுதொடர்பாக மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருமுருகன் காந்தி தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு திரும்பியபோது, பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளார். வரும் ஞாயிறு அன்று பெங்களூரில் மே 17 இயக்கத்தின் சார்பாக கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரணத்தினால் பெங்களூர் விமான நிலையத்தில் இன்று காலை வந்து இறங்கினார். இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஐ.நாவில் பேசியதற்காக பழைய போராட்ட வழக்குகளை காரணம் காட்டி திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய மற்றும் மாநில அரசின் இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்’ என குறிபிடப்பட்டுள்ளது.

2009 தமிழீழ இனப்படுகொலைக்காக கடந்த ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்தியதற்காக மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top