மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்ய பணிகள் தொடங்கியது

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 95.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என அக்கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுபற்றிய திமுகவின் மனு மீது நேற்று இரவு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷின் வீட்டில் வைத்து விசாரணை நடைபெற்றது.

இந்த மனு மீது பதிலளிக்கும்படி இன்று காலை 8 மணிக்கு தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் தி.மு.க. தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் தொடங்கியது. இரு தரப்பினரும் அனல் பறக்கும் வாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பு வாதமும் நிறைவடைந்ததும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ், சுந்தர் அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.

ஐகோர்ட் தீர்ப்பையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் கண்ணீர் மல்க கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கருணாநிதிக்கு மெரினாவில் இடம் உத்தரவை தொடர்ந்து உணர்ச்சிவசப்பட்ட ஸ்டாலின் குலுங்கி அழுதார்.

அண்ணா நினைவிடத்தின் வலதுபுறத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்யும் இடம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் ஆய்வு நடத்தி வருகிறார்.

மெரினா கடற்கரையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ள இடத்தை தூய்மைபடுத்தும் பணிகள் தொடங்கியது.

கலைஞர் அடக்கம் செய்யப்பட வேண்டிய இடத்திற்கான வரைபடத்திற்கு உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் பள்ளம் தோண்டுவதற்காக 2 ஜேசிபி இயந்திரங்கள் வருகை தந்துள்ளது. போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top