மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கத் தடை கோரிய மனு வாபஸ்!

மெரினா கடற்கரையில் உடல்களை அடக்கம் செய்து நினைவிடம் அமைக்கத் தடை கோரிய மனுவை மனுதாரர் திரும்பப் பெற்றதால் வழக்கைத் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் வி.காந்திமதி, இவர் பொதுநல மனு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதில் இறந்தவர்களின் உடலை பொது இடத்தில், குறிப்பாக மெரினா கடற்கரையில் அனுமதி பெற்றோ, பெறாமலோ புதைப்பது, எரிப்பது கூடாது என்று உத்தரவிடக் கோரியிருந்தார்.

அவரது பொதுநல மனுவில், “மெரினா கடற்கரை தற்போது சுடுகாடாக மாறி வருவதால், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும். குடியிருப்புப் பகுதிகளிலும், அதிக மக்கள் நடமாட்டம் உள்ள மெரினா கடற்கரையில் உடல்களைப் புதைப்பது பொதுமக்களுக்கு மிகப்பெரிய இடையூறை ஏற்படுத்துகிறது.

உடல்களைப் புதைப்பதற்கும், எரிப்பதற்கும் மாநகராட்சி சட்டவிதிகளின்படி, சென்னை மாநகராட்சி ஆணையர் தான் அனுமதி வழங்கவேண்டும். ஏற்கெனவே, மெரினா கடற்கரையில் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது உடலைப் புதைத்து நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் எல்லோரும் மறையும் போது முதல்வராக இருந்தவர்கள்.

இதற்கு மேலும், அங்கு வேறு யாராவது உடலை அடக்கம் செய்ய மாநகராட்சி ஆணையர் அனுமதி வழங்கினால், கண்டிப்பாக கடற்கரையில் உள்ள சுற்றுச்சூழலை அது அழித்து விடும்.
எனவே, சுடுகாடு அல்லாத பிற பகுதிகளில், உடல்களைப் புதைக்க வேண்டும் என்றால், அதற்கு விதிமுறைகளை உருவாக்கும்படி தலைமைச் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு கடந்த ஜூலை 30-ம் தேதி மனு அனுப்பினேன்.

ஆனால் இதுவரை எந்தப் பதிலும் இல்லை. எனவே, பொது இடங்களில் உடல்களைப் புதைப்பதற்கும், எரிப்பதற்கும் விதிகளை உருவாக்க தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட வேண்டும். இனி மெரினா கடற்கரையில் யாருடைய உடலையும் புதைக்கவோ, எரிக்கவோ அனுமதிக்க மாநகராட்சி ஆணையருக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ஜி. ரமேஷ், நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது. ஆனால் வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பான முறையீட்டு நேரத்தில் வழக்கறிஞர் காந்திமதி ஆஜராகி, சில காரணங்களுக்காக இந்த மனுவை வாபஸ் பெறுவதாகவும், அதற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அதனை ஏற்ற நீதிபதிகள், மெரினாவில் மேற்கொண்டு நினைவிடம் அமைக்கக் கூடாது என விதிமுறைகளை உருவாக்கக் கோரிய வழக்கை வாபஸ் பெற அனுமதித்து வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top