சிலைக் கடத்தல்; சி.பி.ஐ-க்கு மாற்றிய தமிழக அரசு அரசாணை; ஐகோர்ட் இடைக்காலத் தடை

தமிழக அரசு சமீபத்தில் சிலைக் கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றி அரசாணை வெளியிட்டது. ஒரு நிமிடம் கூட நீடிக்க விடமாட்டோம் தமிழக அரசாணையை என்று தமிழக அரசின் உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஏராளமான புராதன கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் சிலவற்றில், சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக வக்கீல் யானை ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.மகாதேவன், இந்த வழக்குகளை எல்லாம் விசாரணை நடத்த ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை ஒன்றை உருவாக்கி உத்தரவிட்டார்.

இதையடுத்து ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நடத்திய விசாரணையில், சிலை கடத்தல் சம்பவத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட பல முக்கிய நபர்களுக்கு தொடர்பு உள்ளது தெரிய வந்தது.மேலும், கொள்ளையடிக்கப்பட்ட பல சிலைகள் மீட்கப்பட்டன. பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சாமி சிலை செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை இந்த தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைப்பது குறித்து தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது என கூறினார். இதை தொடர்ந்து சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

அரசின் இந்த அரசாணைக்குப் பல அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், தமிழக அரசின் இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி வக்கீல் யானை ராஜேந்திரன் நேற்று சென்னைஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் சிறப்பு வழக்கறிஞர் கூறும்போது, “தமிழக அரசின் அரசாணை, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக இல்லை. முன்னதாக கும்பகோணம் நீதிமன்றத்தில் சிலைக் கடத்தல் தொடர்பாக நிலுவையிலுள்ள அனைத்து வழக்குகளையும் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் விசாரணை செய்வார்.

சிலைக் கடத்தல் தொடர்பான புதிய வழக்குகளை மட்டும் சி.பி.ஐ விசாரிக்கட்டும் என்றே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதில் தவறு ஒன்றும் இல்லை. இது அரசின் கொள்கை முடிவு” எனக் கூறினார். பின்னர் அரசாணை பிறப்பிக்கப்பட்டது தொடர்பான முழு விவரத்தையும் நீதிபதிகள் கேட்டறிந்தனர்.

தொடர்ந்து இந்த அரசாணை நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகத்தான் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இதை இன்னொரு ஒரு நிமிடம் கூட நீடிக்க விடமாட்டோம் எனக் கூறி தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top