காஸ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டம் 35ஏ பிரிவு குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 35ஏ சட்டப் பிரிவு அரசியல் சட்டத்தின் அடிப்படைக்கு எதிரானதா என்பது குறித்து விசாரணை செய்யப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 27-ம் தேதி நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் சட்டப்பிரிவு 35ஏ படி சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சட்டப்பிரிவின் மூலம் காஷ்மீர் மக்களை தவிர, வெளிமாநில மக்கள் யாரும் அசையா சொத்துக்களை வாங்க முடியாது.

இந்தநிலையில், காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 35ஏ செல்லாது என அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

‘‘அரசியல் சட்டப்பிரிவு 35ஏ என்பது 1954ம் ஆண்டு குடியரசு தலைவர் வெளியிட்ட உத்தரவின் வழியாக பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தாக்கலான வழக்கு ஆகஸ்ட் 27-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்யும். சட்டப்பிரிவு 35ஏவுக்கு அரசியல் சட்டத்திற்கு எதிரானது என மனுதாரர் கூறியுள்ளார். இதுபற்றி உச்ச நீதிமன்றம் விசாரணை செய்யும். அரசியல் சாசன அமர்வு விசாரணை குறித்து, மூன்று நீதிபதிகள் அமர்வே முடிவு செய்து அறிவிக்கும்’’ எனக் கூறினர்

முன்னதாக மனுதாரர் தரப்பில் அரசியல் சட்டப்பிரிவு 35ஏவுக்கு எதிரான வாதங்கள் அடங்கிய விரிவான மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேசமயம் சமூக அமைப்புகள், தனிநபர்கள் என பல்வேறு தரப்பினர் சார்பில் சட்டப்பிரிவு 35ஏவுக்கு ஆதரவாக இன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதனிடையே, இந்த வழக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிறப்பு சலுகைகள் வழங்கும் சட்டப்பிரிவுக்கு ஆதரவாகவும் காஷ்மீரில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் இன்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top