பிஜேபி அரசின் அவலங்களை சொல்லும் பத்திரிக்கையாளர்களை மிரட்டும் மோடி அரசு:

செய்திக் கட்டுரை

2014இல் கார்ப்ரேட் முதலாளிகளாலும் , ஆர்.எஸ்.எஸ் என்ற பிற்போக்கு வலதுசாரி இயக்கத்தாலும் முன்மொழியப்பட்டு ஆட்சிக்கு வந்த மோடி அரசு. மக்களுக்கு ஒன்றும் செய்யாமல் வெறும் விளம்பரங்களின் மூலம் தனது அரசு அதை செய்தது இதை செய்தது என்ற போலி பிம்பத்தை கட்டி எழுப்பி வருகிறது. இதற்கு பெரும்பாலான ஊடகங்கள் துணைபோகும் அவலமும் நடக்கிறது. அதையும் மீறி பிஜேபி அரசின் அவலங்களை வெளிக்கொண்டுவரும் பத்திரிக்கையாளரை அந்நிறுவனத்திற்கு அரசின் சார்பில் நெருக்கடி கொடுத்து வெளியேற்றும் வேலையை மோடி அரசு செய்கிறது.

ஏற்கனவே EPW பத்திரிக்கையில் அதானி குழுமத்திற்கு மோடி அரசு காட்டிய சலுகை குறித்து எழுதியாதால் அதன் ஆசிரியர் பரன்ஜாய் குஹா தாகுர்தா நெருக்கடி கொடுக்கப்பட்டு இராஜினாமா செய்யவைக்கப்பட்டார். அதேபோல The Wire இணையத்தில் பாஜக தலைவர் அமித்ஷாவின் மகனின் நிறுவனம் எப்படி ஒரு வருடத்தில் 110மடங்கு வளர்ச்சி கண்டது என்று எழுதியதற்காக அதன் ஆசிரியர் மிரட்டப்பட்டார். இதுபோல என்னெற்ற பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து மிரட்டுப்பட்டு வருகிறார்கள். இந்த வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருப்பவர்கள் நொய்டாவை தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டுவரும் ஏ.பீ.பி (ABP GROUP) இந்தி தொலைகாட்சியின் நிர்வாக இயக்குநர் மிலிந்த காந்தேகார் மற்றும் பத்திரிக்கையாளர் புன்யா பிரசன் பாஜ்பாய் இருவரும் தங்களது வேலையை இராஜினாமா செய்திருக்கிறாரகள்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னால் மோடி அரசு விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயத்தை அறிவித்தது. இதனால் எங்களின் (விவசாயிகளின்) வருமானம் இரட்டிப்பு ஆகிவிட்டதென்று மோடி அரசுக்கு நன்றி என்று சத்திஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சந்திரமணி என்ற பெண் மோடியை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கும் ஒரு காணொளியை பிஜேபி அரசு விளம்பரப்படுத்தியது. மறுநாள் அனைத்து பத்திரிக்கைகளிலும் இந்த செய்தி முதல் பக்கத்தில் விளம்பரமாக அரசே கொடுத்தது. இந்த சம்பவத்தின் உண்மைதன்மை அறிய மேற்கண்ட ABP தொலைகாட்சியின் நிர்வாக இயக்குநரின் உத்தரவின் பேரில் செய்தியாளர் பாஜ்பாய் சம்பந்தப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்து உண்மையை வெளிக்கொண்டுவந்தார். அதாவது அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் தான் அப்படி சொல்லவேண்டுமென்று சொல்லச்சொன்னார்கள் என்ற உண்மையை அவர் சொன்னதை அந்த தொலைகாட்சி தனது மாஸ்டர் ஸ்ட்ரோக் நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பிவிட்டது. அந்த நிகழ்ச்சிகான காணொளி

இதனை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் டிவிட்டரில் பதிவு செய்ததோடு நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்பினர்.

இதனை மறுத்து மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமனும், ராஜ்யவர்தன் ரத்தோரும் மாறி மாறி டிவிட்டரில் பொய் என்று சொல்லிக்கொண்டிருந்தனர்.

இதனால் அந்த செய்திநிறுவனம் மேலும் ஒரு விடியோவை அந்த பெண் பேசுவதை நேரலையில் ஒளிபரப்பியது. இதோடு நிற்காமல் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் இரவு 9-10 மணிக்கு ஒளிபரப்படும் மாஸ்டர் ஸ்ட்ரோக் நிகழ்ச்சியில் தொடர்ந்து மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாட்டில் ஏற்பட்டிருக்கிற வேலையில்லா திண்டாட்டம் விவசாயிகள் மரணம் உள்ளிட்ட பல்வேறு செய்திகளை ஆதாரத்தோடு வெளியிட்டுவந்தது. இதனால் ஆத்திரமடைந்த பிஜேபி அரசு அந்த 9-10 மணி மட்டும் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யும் நேரத்தில் இடைஞ்சலை கொடுத்திருக்கிறது.

இந்த தகவல் பல்வேறு மட்டத்தில் பேசப்பட்டு இறுதியில் பத்திரிக்கையாளர்கள் சிலர் அரசின் இந்த நடவடிக்கையை நேரடியாக எதிர்த்து கேள்வி எழுப்பினர். இதனால் இனி ஒளிபரப்புக்கு இடைஞ்சல் ஏற்படுத்த முடியாத பிஜேபி அரசு சம்பந்தப்பட்ட நிறுவனத்தை மிரட்டி அந்த பத்திரிக்கையாளரை வேலையிலிருந்து நீக்கவைத்திருக்கிறது. தான் சொல்லித்தானெ அவர் அந்த வேலையை செய்தார் என்பதற்காக 14ஆண்டுகளாக வேலைபார்த்து வந்த அந்த தொலைகாட்சியின் நிர்வாக இயக்கனரும் தன் வேலையை இராஜினாமா செய்திருக்கிறார்.

இப்படியாக கருத்துரிமையை மறுத்து தாங்கள் ஒரு பாசிசவாதிகள் தான் என்று மீண்டும் மீண்டும் நிருபித்துக்கொண்டிருக்கிறது மோடி அரசு. அரசின் ஊடகத்திற்கெதிரான இந்த பாசிச நடவடிக்கைக்கு அனைத்து ஆற்றல்களும் இணைந்து எதிர் குரல் எழுப்பவேண்டும் இல்லையென்றால் நாளை இந்திய ஒன்றியத்தில் கருத்து சுதந்திரம் காற்றில் பறக்கவிடப்பட்டுவிடும்.

கொண்டல்சாமி


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top