ரிசர்வ் வங்கிக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு; காசோலை வாங்கும்போது ரசீது வழங்க வேண்டும்

காசோலை, வரைவோலையை வாடிக்கையாளர்கள் செலுத்தும்போது அதற்கு ஆதாரமாக வங்கி அலுவலர்கள் கையெழுத்துடன் கூடிய ரசீது வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் திவ்யா. இவருக்கு வருங்கால வைப்பு நிதி மூலம் கிடைக்க வேண்டிய தொகையான 6 ஆயிரத்து 690 ரூபாயை வங்கி காசோலையாக வருங்கால வைப்பு நிதி அலுவலகம் வழங்கி உள்ளது. அந்த காசோலையை திவ்யா, வங்கியில் அளித்தபோது வங்கி கணக்கில் பணம் வரவு ஆகவில்லை.

இதுகுறித்து திவ்யா புகார் அளித்தும் வங்கி நிர்வாகம் மற்றும் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதன்பின்பு, சில மாதங்களுக்கு பின்பு புதிதாக காசோலை வழங்கி பணம் கிடைக்க வருங்கால வைப்பு நிதி அலுவலகம் நடவடிக்கை மேற்கொண்டது.

வருங்கால வைப்பு நிதி அலுவலகம் மற்றும் வங்கி நிர்வாகத்தின் நடவடிக்கை தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதால் தனக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று திவ்யா கோவை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு, திவ்யாவுக்கு இழப்பீடாக வருங்கால வைப்பு நிதி அலுவலகம் ரூ.11 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதை எதிர்த்து வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சென்னையில் உள்ள மாநில நுகர்வோர் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி தமிழ்வாணன், உறுப்பினர் பாஸ்கரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

பாதிக்கப்பட்ட திவ்யாவுக்கு ரூ.11 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்ற கோவை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. இந்த தொகையை வருங்கால வைப்பு நிதி அலுவலகம், வங்கி நிர்வாகம் ஆகியவை சேர்ந்து வழங்க வேண்டும்.

காசோலை, வரைவோலையை வங்கிகளில் செலுத்தும்போது அதை பெற்றுக்கொண்டதற்கு ஆதாரமாக உரிய படிவத்தில் வங்கி அலுவலர் கையெழுத்திட்டு, சீல் வைத்து கொடுக்க வேண்டும். இதை அனைத்து வங்கி நிர்வாகங்களும் மேற்கொள்ள ரிசர்வ் வங்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோன்று வங்கி நிர்வாகங்கள் தற்போது வழங்கும் காசோலை புத்தகத்தை பொறுத்தமட்டில் காசோலை யாருக்கு வழங்கப்பட்டது என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ளும் வகையில் நன்கொடை புத்தகத்தில் இருப்பது போன்ற பகுதியும் (கவுண்ட்டர் பாயில்) இருக்குமாறு காசோலை புத்தகங்களை வங்கி நிர்வாகங்கள் வழங்கவும் ரிசர்வ் வங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top