காவேரியில் வளம் பெருக்க வருகிறது இந்த வருட ஆடி பெருக்கு!

வருடம் வருடம் ஆடிபெருக்கு வந்தாலும் காவேரி டெல்டா விவசாயிகள் பெரிய உற்சாகம் கொள்வதில்லை.காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெரிய அளவில் தண்ணீர் வராததால் விவசாயிகளிடம் பெரிய உற்சாகம் காண்பதில்லை. ஆனால் இந்த வருடம் அப்படி இல்லை. தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து காவேரி பெருக்கெடுத்து ஓடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.இந்த வருடம் ஆடிபெருக்கு சிறப்பாக இருக்கும் என தெரிகிறது.

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும்.

ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஆற்றங்கரையோரம் முழுவதும் உற்சாகக் கோலாகலம்தான். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று எல்லோருக்கும் கொண்டாட்டம்தான் என்றாலும் குறிப்பாக இதைப் பெண்கள் திருவிழாவாகவே நடத்துவதைக் காண முடியும். காலையில் எழுந்து குளித்து முடித்து பூ, மஞ்சள், குங்குமம், வளையல், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம் என்று மங்கலப் பொருட்களோடு தன் வயதொத்தவர்களோடு கிளம்புவார்கள் பெண்கள். சிறு தேர் உருட்டும் சிறுமிகள், சில்லிக்கோடு அடிக்கும் இளம் பெண்கள், தற்போதுதான் திருமணமாகியிருக்கும் குமருகள், திருமணமான இளம் மற்றும் நடுத்தர வயதுப் பெண்கள், வயோதிகப் பெண்கள் என்று எல்லாப் பருவத்தினரும் ஆற்றங்கரைக்குப் போகக் கிளம்புவதில் இருந்தே கொண்டாட்டம் ஆரம்பித்துவிடும்.

பெருக்கு என்றால் பெருகுவது என்று அர்த்தம். ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடுகிறார்கள். காவிரி பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டு எல்லையான ஒகேனக்கல்லில் நுழையும்போது தொடங்கி, காவிரி சமுத்திர ராஜனைக் கலக்கும் பூம்புகார் வரையிலும் இருக்கிற மக்களால் கொண்டாடப்படும் பெருந்திருவிழா இந்த ஆடிப்பெருக்கு. தங்களை வாழவைக்கும், வளப்படுத்தும் காவிரியை அதன் கரையோரப் பகுதிகளில் இருக்கும் மக்கள் சிறப்பிப்பதற்காகத் துவங்கப்பட்ட இந்த விழா இன்று ஒட்டுமொத்த தமிழகம் முழுவதிலும் எல்லாத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஆடிப்பெருக்கினை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கின்றனர். பொதுவாக சமய விழாக்கள் நாட்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவதில்லை. நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டும், கிழமைகளையும் கொண்டே நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தில் 18வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா ஆடிபெருக்கு விழாவாகும்.

ஆடி 18-ம் நாளில் பெருகி வரும் புது வெள்ளத்தை வணங்கினால் பயிர்கள் செழிக்கும், விவசாயத்திற்கு தேவையான நீர்வளம் குறைவின்றி கிடைக்கும் என்பது உண்மை.

காவிரியாற்றின் பெருமையை பலரும் புகழ்ந்து பாடி உள்ளனர். அத்தனை பெரும் பழமையும், சிறப்பும் வாய்ந்த காவிரியன்னையை வரவேற்கும் விதத்தில் கொண்டாடுவதே ஆடி பெருக்கு.

ஆடி 18-ம் நாளில் பெருகி வரும் புது வெள்ளத்தை வணங்கினால் பயிர்கள் செழிக்கும், விவசாயத்திற்கு தேவையான நீர்வளம் குறைவின்றி கிடைக்கும் என்பது உண்மை. அதனாலேயே விவசாய பெருமக்களுடன் கூடி பலதரப்பு மக்களும் பொன் நிறத்தில் தவழ்ந்து வரும் காவிரியை வணங்குகின்றனர்.

நதியை தெய்வமாக வழிபடும் பெண்கள்

நதியை வழிபடுவது பன்னெடுங்காலமாய் இருந்து வரும் வழக்கம். நமது தமிழகத்தில் குறிப்பாக ஆடி பெருக்கு எனும் பதினெட்டாம் நாள் பெருக்கு அன்று நதிகள் கரைபுரண்டு ஓடும். அந்த நாளில் புதுவெள்ளம் ஓடும் காவிரியன்னை தம்மை வணங்கும் பெண்களுக்கு நல்ல கணவனையும், கணவனின் நலத்தை காப்பாள் என்று வணங்குகின்றனர். இதற்காகவே ஆடிபெருக்கு அன்று சுமங்கலிகளும், கன்னி பெண்களும் படித்துறை தோறும் புத்தாடை அணிந்து பொங்கி வரும் அன்னை காவிரியை வணங்கி, அவளை அலங்கரிக்கும் பொருட்களை சமர்பிக்கின்றனர்.

ஆடிபெருக்கும் பூஜையில் காதோலை, கருகமணி, காப்பரிசி மிக முக்கியமானது. மேலும் நைவேந்தியமாக சித்திர அன்னங்கள் மற்றும் புதுமஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள் போன்றவையும் பூஜை பொருட்களாக உள்ளன. காவிரியாற்றின் படித்துறைகளில் பெண்கள் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து விளக்கேற்றி, மேற்சொன்ன பொருட்கள், நெய்வேந்தியம் போன்றவை வைத்து கற்பூரம் ஏற்றி பூஜை செய்வர். பூஜையில் வைத்த புதிய தாலிக்கயிற்றை சுமங்கலிகள் கழுத்தில் அணிந்து கொள்வர். ஆண்கள் வலதுகரத்தில் கட்டி கொள்வர். கன்னி பெண்கள் காவிரியன்னையை வேண்டி மஞ்சள் கயிறை அணிவது வழக்கம்.

காவிரி தமிழகத்தில் புகும் ஒகேனக்கல் பகுதியில் இருந்து ஆடி பெருக்கு விழா நடைபெறுகிறது. ஆயினும் சிறப்புமிகு பவானி சங்கமம் என்னும் மூன்று நதிகள் கூடும் இடத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஆடிபெருக்கு அன்று கூடுவர். பின் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் காவிரியன்னையை பூஜித்து பூக்கள் மற்றும் குங்குமம் போன்றவற்றை ஓடும் வெள்ளத்தில் போட்டு வணங்குவர். சிலர் வாழைமட்டையில் விளக்கேற்றி நதிகளில் விடுவர்.

ஆடிபெருக்கும் முளைபாரி விழாவும்

ஆடி பெருக்கு என்பதே விவசாயம் தழைக்க வேண்டி நடைபெறும் விழாவாகும். அதனால் ஆடி பெருக்கிற்கு முன்பே நவதானியங்களை மண்ணில் பரப்பி விளையவிட்டு பயிர்கள் வளர்ந்ததை ஒரு சட்டியில் கொண்டு வந்து காவிரியாற்றின் படித்துறைகளில் வைத்து பூஜித்து, கும்மியடித்து பாடி, குலவையிட்டு பின் ஆற்றில் கலக்க விடுவர். இதில் செல்லும் முளை பயிர்கள் ஏதேனும் நிலப்பகுதியில் நன்கு செழித்து வளரும். இதன் மூலம் பயிர்கள் வெவ்வேறு நில பகுதிகளிலும் சிறப்பாக வளர்ச்சி பெறும் என்பது உறுதி. அதுபோல், ஆடி பதினெட்டாம் பெருக்குக்கு இணைந்தபடியே மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முளைகொட்டு திருவிழா என்றவாறு அனைவரும் முளைபாரி கொண்டு வந்து அம்மனிடம் வைத்து வணங்கி பின் அவை ஆற்றில் கலக்கவிடப்படும்.

ஆடி பதினெட்டு பெண்களில் நல்வாழ்வை, விவசாய பெருவாழ்வை வளர்க்கும் திருநாளாய் கொண்டாடப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top