அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியீடு: ராஜ்யசபாவில் அமளி

அசாமில் தேசிய மக்கள் தொகை பதிவேடு (NRC) இறுதி வரைவு அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேர் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று கூட்டம் தொடங்கியதும், பாராளுமன்ற ராஜ்யசபாவில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.சுகுந்த ராய், தேசிய மக்கள் தொகை பதிவேடு அறிவிப்பு குறித்து ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு நோட்டீஸ் கொடுத்தார்.

அதில், அசாம் அரசு வெளியிட்டுள்ள குடிமக்கள் பற்றிய இறுதி தேசிய பதிவேட்டில், 40 லட்சம் பேரை சேர்க்காமல் விட்டு விட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும், தேசிய வாக்காளர் பதிவின் இறுதி வரைவு அறிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், இந்த தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், இதுகுறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று கூறினார்.

ஆனால், அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக கூறிய, மேல்சபை தலைவர் வெங்கையா நாயுடு, இதுகுறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பதிலளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

எதிர்க்கட்சியைக் கேட்க விரும்புகிறேன், இதில் மத்திய அரசின் பங்கு என்ன? இது சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையின் கீழ் நடக்கிறது. இத்தகைய முக்கிய பிரச்சினைகள் அரசியல்மயமாக்கப்படக் கூடாது என மத்திய மந்திரி ராஜ்நாத் கூறினார்.

இதன் காரணமாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து பாராளுமன்ற மேல்சபையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக வெங்கையா நாயுடு அறிவித்தார்.

அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களை கண்டறியும் பொருட்டு தயாரிக்கப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் வரைவு பதிவேடு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

அசாமில் 3.29 கோடி மக்கள் வசிக்கின்றனர். அசாம் மாநிலம் வங்கதேசத்தை ஒட்டி அமைந்துள்ளதால் அங்கு வங்கதேசத்தைச் சேர்ந்த அகதிகள் குடியேறி விடுகின்றனர். இதனால் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், யார் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. அசாம் மக்களோடு மக்களாக அவர்கள் கலந்து வசித்து வருவதால் அதிகாரிகளுக்கு அவர்களை இனம் பிரிப்பதில் சிக்கல் உள்ளது.

இதைத் தடுப்பதற்காக அங்கு தேசிய குடிமக்கள் பதிவேட்டை அசாம் மாநில அரசு தயார் செய்து வருகிறது. இதற்காக அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்களைச் சரிபார்த்தல், ஆவணங்களைச் உறுதி செய்தல் என பல முறைகளில் அசாம் மாநில அதிகாரிகள் இந்த பதிவேட்டைத் தயார் செய்தனர்.

இதன் வரைவு பட்டியல் ஏற்கெனவே வெளியிடப்பட்டது. இதில், ஏராளமானோர் பெயர் விடுபட்டதாக புகார் எழுந்தது. இதுபற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், தலைவர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் விடுபட்டதாக கூறப்பட்டது.

அசாம் மாநில அரசு தயாரித்து வரும் தேசிய குடிமக்கள் பதிவேடு வரைவு பட்டியலில் வங்கதேசத்தை சேர்ந்த இந்துக்களின் பெயர்களை சேர்க்கும் முயற்சியில் ஆளும் பாஜக அரசு ஈடுபட்டுள்ளதாக அதன் கூட்டணிக் கட்சியான அசாம் கண பரிஷத் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி வரைவுப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அசாம் மாநிலத்தில் 3.29 கோடி பேர் வசித்து வரும் நிலையில், 2.89 கோடி மக்களின் பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது. மொத்தம் 40 லட்சம் பேரின் பெயர்கள் இந்த பட்டியலில் விடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் வங்கதேசத்தவர்களா அல்லது இந்திய குடிமக்கள் பெயர் விடுபட்டுள்ளதா என்ற விவரம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த பட்டியலில் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. எனினும் இந்த வரைவு வாக்காளர் பட்டியல் மட்டுமே நியாயமான நபர்களின் பெயர்கள் விடுபட்டு இருந்தால், அவர்கள் பெயர் மீண்டும் சேர்க்கப்படும் என அசாம் மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top