அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தா.பாண்டியனிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்

சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியனை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு நேற்று முன்தினம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவருக்கு சிறுநீரக பிரச்சினை இருப்பது தெரிய வந்தது. டாக்டர்கள் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று மருத்துவமனைக்கு சென்று தா.பாண்டியனை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அப்போது முன்னாள் அமைச்சர் பொன்முடி, சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜாவும் மருத்துவமனைக்கு வந்து தா.பாண்டியனின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

இதைத் தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மருத்துவமனைக்கு வந்து தா.பாண்டியனை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். பின்னர் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அப்போது மருத்துவமனை டீன் ஆர்.ஜெயந்தி உடன் இருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும்போது, ‘‘தா.பாண்டியனுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் நலமாக இருக்கிறார். இன்னும் ஓரிரு நாளில் வீடு திரும்புவார்

.திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த மருத்துவமனை டாக்டர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். கருணாநிதிக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய தமிழக அரசு தயாராக இருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்’’ என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top