டெல்லியில் கனமழை: மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வானிலை மையம் தகவல்

டெல்லி நகர் முழுவதும் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சாலை போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. சில பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உருவாகியுள்ளது.

மேலும், மைன்புரி, சைய்ஃபாய் மற்றும் ஆக்ரா ஆகிய பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இரவு முழுவதும் பெய்த பலத்த மழை காரணமாக நகரெங்கும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. மேலும் அங்குள்ள வசுந்தரா பகுதியிலுள்ள சாலையில் பெரும் பள்ளம் ஒன்று உருவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் காலை 8.30 மணி நிலவரப்படி சுமார் 91 சதவீத அளவு காற்றில் ஈரப்பதம் இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதனிடையே டெல்லியில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 32.2 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் பதிவானதாக டெல்லி வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. நொய்டாவில் காலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக அலுவலகத்திற்கு செல்பவர்கள் பெரிதும் சிரமமுற்றனர். இதனால் டெல்லியிலிருந்து நொய்டா நோக்கி செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top