இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் போராட்டம்; வன்முறை பரவியதால் போராட்டம் வாபஸ்

இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்திய போராட்டத்தில் வன்முறை பரவியதையடுத்து, மராத்தா சமூக அமைப்புகளின் முழு அடைப்பு போராட்டம் திரும்ப பெறப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலத்தில் அரசுப் பணி மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மராத்தா கிரந்தி மோர்ச்சா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இரண்டாவது நாளாக இன்றும் முழு அடைப்பு போராட்டம் நீடித்தது.

ஆனால், போலீஸ் பாதுகாப்பையும் மீறி, போராட்டக்காரர்கள் இன்று வன்முறையில் ஈடுபட்டனர். குறிப்பாக மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் வன்முறை வேகமாக பரவியது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதால் சில வழித்தடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் போராட்டமும் நடைபெற்றது. போராட்டம் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கற்களை வீசி தாக்கியவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

இவ்வாறு வன்முறை தீவிரமடைந்ததையடுத்து, முழு அடைப்பு போராட்டத்தை திரும்ப பெறுவதாக மராத்தா தலைவர்கள் இன்று பிற்பகல் அறிவித்தனர். மேலும் தங்கள் போராட்டம் வெற்றியடைந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

நாங்கள் ஒற்றுமையுடன் இருப்பதை நிரூபிக்கவே விரும்பினோம். ஆனால் ஒருபோதும் போராட்டங்கள் வன்முறையாக மாறுவதை விரும்பமாட்டோம் என்றும் அவர்கள் கூறினர்.

தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாரும் வன்முறையில் ஈடுபடவில்லை என்றும், இதற்கு அரசியல் சதிதான் காரணம் என்றும் மராத்தா கிரந்தி மோர்ச்சா ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் வீரேந்தர் பவார் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், எந்த வன்முறையும் இன்றி 58 அமைதி பேரணிகளை நடத்தியிருப்பதாகவும், இட ஒதுக்கீடு தொடர்பாக அரசாங்கத்திடம் இருந்து எந்த பதிலும் வராததால் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top