மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு: அணையின் நீர்மட்டம் 114 அடியாக உயர்ந்தது

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து, 114.40 அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணை மொத்தம் 120 அடி கொள்ளளவு கொண்டது. அணை கடந்த 5 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது 100 அடியைக் கடந்துள்ளது. புதன்கிழமை இரவு அணை நீர்மட்டம் 105 அடியை எட்டியது. அணையின் நீர் இருப்பு 71 டிஎம்சி-யாக அதிகரித்தது. அணை பகுதிகளில் ஏற்கெனவே, மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓரிரு நாளில் அணை முழுக்கொள்ளளவை எட்டவுள்ள நிலையில், அணையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள காவிரி கரையோரப் பகுதி கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காவிரி டெல்டா பாசனத்துக்காக வியாழக்கிழமை காலை முதல்வர் பழனிசாமி மேட்டூர் அணையை திறந்து வைத்தார். முதற்கட்டமாக விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.04 அடியாகவும், நீர் இருப்பு 81.33 டிஎம்சியாகவும் இருந்தது. அணைக்கான நீர்வரத்து 1,01,277 கனஅடியிலிருந்து 59954 கன அடியாக குறைந்தது.
இந்நிலையில், சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, நீர்மட்டம் 114.40 அடியாகவும், நீர்இருப்பு 85.16 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 59,954 அடியிலிருந்து 64,595 கனஅடியாக அதிகரித்துள்ளது. பாசனத்திற்கு விநாடிக்கு 20,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top