தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; ஒரு சம்பவத்துக்கு 200-க்கும் மேற்பட்ட வழக்கா?- நீதிபதிகள் கேள்வி

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்தது ஏன் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜான் வின்சென்ட், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனுவின் விவரம்: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிப்காட் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்கின்றனர். இதனிடையே துப்பாக்கிச்சூடு தொடர்பாக காவல் நிலையங்களில் தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

சிப்காட் காவல் நிலையத்தில் 142 வழக்குகளும், தூத்துக்குடி வடக்கு, தெற்கு, மத்திய காவல் நிலையங்களில் 100 வழக்குகள் என 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் அடிப்படையில் போலீஸார் பொதுமக்களை துன்புறுத்தி வருகின்றனர். எனவே, அனைத்து வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து ஒரே வழக்காக விசாரிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள 15 பொதுநல வழக்குகளும் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் வாதிடுகையில், “ஒரே சம்பவத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்ய முடியாது. முதல் வழக்கிலேயே துப்பாக்கிச் சூடு சம்பவம் முழுவதும் விவரிக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தனித்தனியாக 200-க்கும் மேற்பட்ட வழக்குகளை போலீஸார் பதிவு செய்துள்ளனர் என்றார்.

அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த் பாண்டியன் வாதிடுகையில், மே 22ல் போராட்டக்காரர்களால் ரூ.15.76 கோடி மதிப்பில் பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 130 தனியார் வாகனங்கள் உள்பட 186 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு தொடர்பாக காவல் நிலையங்களில் அளிக்கப்படும் புகாரின் அடிப்படையில் அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்பு இல்லாதவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல. இந்த மனுக்களை பொதுநல மனுவாக கருதக் கூடாது’’ என்றார். அப்போது மனுதாரர்கள் தரப்பில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய நபரும் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு என்பது ஒரே சம்பவம். ஒரு சம்பவத்துக்கு எப்படி இவ்வளவு வழக்குகள் காவல் நிலையங்களில் பதிவு செய்ய முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற 99 நாள் போராட்டம் தொடர்பான வீடியோ பதிவு, உளவுத்துறை அறிக்கையை மூடி முத்திரையிட்ட கவரில் வைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அனைத்து வழக்குகளையும் ஜூலை 23-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top