உலகக்கோப்பை கால்பந்து:அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா வெற்றி

ரஷியாவில் நடந்து வரும் 21-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் இன்று நடந்த 2-வது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணி, குரோஷியாவை எதிர்கொண்டது.

ஆக்ரோஷமாக விளையாடக்கூடிய அணிகளில் ஒன்றான குரோஷியா லீக் சுற்றில் நைஜீரியா, அர்ஜென்டினா, ஐஸ்லாந்து ஆகிய அணிகளை வென்றது. 2-வது சுற்றில் டென்மார்க்கையும், கால்இறுதியில் ரஷியாவையும் வெற்றிகொண்டது.

அதேபோல், 28 ஆண்டுகளுக்கு பிறகு அரைஇறுதிக்கு தகுதி பெற்றிருக்கும் இங்கிலாந்து அணி லீக் சுற்றில் துனிசியா, பனாமா அணிகளை தோற்கடித்து பெல்ஜியத்திடம் தோல்வியை தழுவியது. அதன் பிறகு 2-வது சுற்றில் கொலம்பியாவையும், கால்இறுதியில் சுவீடனையும் வென்றது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரைஇறுதிப்போட்டியில் இரு அணிகளும் பரபரப்பாக மோதிக் கொண்டன. இதில் ஆட்டம் தொடங்கிய 5-வது நிமிடத்திலே இங்கிலாந்து வீரர் கிரெய்ன் டிரிப்யேர் முதல் கோல் அடித்து அசத்தினார். இதனை சமன் செய்ய குரோஷியா அணியினர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதியின் 68-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் இவான் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சமன் ஆனது. அதைத்தொடர்ந்து நடந்த பரபரப்பான ஆட்டத்தில் இரு அணியினராலும் கோல் போட முடியவில்லை. இதனால் இரண்டாவது பாதி ஆட்ட நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதிலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதன் மூலம் மேலும் கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் குரேஷியா வீரர் மாரியோ 1 கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். இதனால் குரோஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணி வெற்றிபெற்று இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது.

2-வது முறையாக அரைஇறுதிக்குள் (இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு) நுழைந்த குரோஷிய அணி முதல்முறையாக இறுதிசுற்றை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top