தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரணை; அரசு விளக்கம்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.கலெக்டர் மீது கொலைவழக்கு பதிவு செய்யவேண்டும் என கொடுக்கப்பட்ட வழக்கு மனு நேற்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

தூத்துக்குடியில் போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி நடத்தியும் பயனற்றுப் போனதால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியதாயிற்று என உயர் நீதிமன்றத்தில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கூறினார்.

இதையடுத்து துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு முன்பு 99 நாட்களாக நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் வீடியோ பதிவுகளை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கான இழப்பீட்டு தொகையை உயர்த்தி தர வேண்டும், துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தலைமை செயலர், உள்துறை செயலர், ஆட்சியர், எஸ்பி உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 16 மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. இவை அனைத்தும் நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் வாதிடும்போது, “தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 99 நாட்களாக மக்கள் போராட்டம் நடத்துவதற்கு போலீஸார் அனுமதி வழங்கினர். நூறாவது நாள் போராட்டத்தின்போது உயர் நீதிமன்றம் உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகரில் 144 தடையாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த தடையை மீறி கூடியவர்கள் ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் கலைந்து செல்லக்கோரி போலீஸார் பலமுறை எச்சரித்த பிறகும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை.

ஊர்வலத்தில் சென்றவர்கள் வாகனங்களுக்கு தீ வைத்தனர். ஆட்சியர் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ஆட்சியர் அலுவலகம், ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் பொதுச்சொத்துகளை பாதுகாக்கும் நோக்கத்திலும் போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. பின்னர் தடியடி நடத்தப்பட்டது.

அவை பயனற்று போனதால் வேறு வழியின்றி துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய நிலைக்கு போலீஸார் தள்ளப்பட்டனர். இச்சம்பவத்தில் 72 போலீஸார் உட்பட 144 பேர் காயமடைந்தனர். 200 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன” என்றார்.

இதையடுத்து, 99 நாட்கள் நடந்த போராட்டத்தின் வீடியோ பதிவுகள், போராட்டம் தொடர்பாக உளவு போலீஸார் அரசுக்கும், காவல் உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பிய தகவல்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, ஜூலை 17-க்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top