தமிழில் நீட் தேர்வு; சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தால் கேவியட் மனு தாக்கல் செய்ய முடிவு

நீட் தேர்வில் உயர் நீதிமன்றக் கிளை பிறப்பித்த உத்தரவால் தமிழில் நீட் தேர்வு எழுதிய 24 ஆயிரம் பேருக்கு கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்கும்.

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு தவறான மொழி பெயர்ப்புக்காக கருணை மதிப்பெண்கள் வழங்க உத்தரவிடக் கோரி மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன் உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். அவர் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் எல்.ஷாஜிசெல்லன் கூறியது:

நீட் தமிழ் வினாத்தாள் மொழி பெயர்ப்பில் பல்வேறு தவறுகள் இருந்தன. குறிப்பாக பாசுமதி அரிசி புதிய ரகம் என்பதற்கு ‘புதிய நகம்’, வெளவ்வால் என்பது ‘வெளனவால்’ என்றும், இடை நிலையை ‘கடை நிலை’ என்றும், ரத்த நாளம் என்பது ‘ரத்த நலன்கள்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த தவறுக்கு சிபிஎஸ்இ தான் முழுக் காரணம்.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் தமிழில் நீட் தேர்வு எழுதிய 24 ஆயிரம் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்கப்படும். கூடுதல் மதிப்பெண்கள் வழங் கும் பட்சத்தில் தேசிய அளவிலான நீட் தரவரிசைப் பட்டியலில் பெரிய அளவில் தாக்கம் ஏற்படும். தேசிய அளவில் நீட் தரவரிசைப் பட்டியலில் முதன்மை இடங்களில் அதிக அளவில் தமிழக மாணவர்கள் வருவர். இதனால் தமிழக மாணவர்களுக்கு அதிக அளவில் மருத்துவ சீட் கிடைக்கும்.

இந்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கட்டாயம் மேல்முறையீடு செய்வார்கள். அவ்வாறு மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் எங்கள் தரப்பு கருத்தைக் கேட்ட பிறகே எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டும் என்பதற்காக கேவியட் மனு தாக்கல் செய்வோம். பின்னர் விசாரணையின்போது உச்ச நீதிமன்றத்தில் எங்கள் தரப்பு வாதத்தை முன்வைப் போம் என்றார்.

உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து மனுதாரர் டி.கே.ரங்கராஜன் கூறியது: நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக மக்களுக்கும், தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கிடைத்த வெற்றியாகும். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடுக்குச் சென்றால், தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களை உதாசீனம் செய்வதாக இருக்கும் என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top