தன்பாலின உறவு; 377-வது சட்ட பிரிவுக்கு எதிரான மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

தன்பாலின உறவை கிரிமினல் குற்றமாக கருதுவதற்கு எதிரான சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் தள்ளி வைக்க மறுத்துவிட்டது. எனவே இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று தொடங்கவுள்ளது.

இந்தியாவில் தன்பாலின உறவு வைத்துக் கொள்வது இந்திய தண்டனைச் சட்டத்தின் 377-வது பிரிவின்படி கிரிமினல் குற்றமாகும். இதற்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க முடியும். இந்நிலையில் தன்பாலினத்தவர்கள் சம்மதத்துடன் உறவு வைத்துக் கொள்வது கிரிமினல் குற்றமாகாது என டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2009-ல் தீர்ப்பளித்தது. மேலும், 377-வது சட்டப்பிரிவு செல்லாது, அது சட்ட விரோதமானது என்றும் கூறியது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தது, இதில் ‘தன்பாலின உறவு கிரிமினல் குற்றம்தான்’ என கடந்த 2013-ல் தீர்ப்பளித்தது.

5 நீதிபதிகள் அமர்வு இதையடுத்து, தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி பல்வேறு தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரிக்க தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. தன்பாலின உறவு விவகாரம் உட்பட 4 முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த அமர்வு இன்று (ஆக. 10) முதல் விசாரிக்க உள்ளது. இந்நிலையில், “இந்த விசாரணையை தள்ளி வைக்க வேண்டும், மத்திய அரசின் பதிலை தெரிவிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்” என்று கோரப்பட்டது.

இந்தக் கோரிக்கையை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று நிராகரித்து விட்டது.

இதையடுத்து தன்பாலின உறவை கிரிமினல் குற்றமாக கருதுவதற்கு எதிரான சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று தொடங்கும் என தெரிகிறது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான இந்த அமர்வில், நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், பி.எப்.நாரிமன், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top