சட்டசபையில் புதிய மசோதா; வளர்ச்சி திட்டங்களுக்கு நிலத்தை கையகப்படுத்தலாம்

அரசின் வளர்ச்சி திட்டங்களுக்காக தனியாரிடம் கையகப்படுத்தப்படும் நிலங்களின் உரிமையாளர்களுக்கு பணத்துக்கு பதிலாக வளர்ச்சி உரிமம் சான்றிதழ் வழங்க வழிவகை செய்யும் மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது.

சட்டசபையில் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவை கொண்டு வந்தார். மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:–

நகர் மற்றும் ஊரமைப்பு சட்டம், ஊரக மற்றும் நகர்ப்புற நிலங்களை திட்டமிட்ட வகையில் மேம்படுத்துவதற்கும், புதுநகர் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் விரிவான வளர்ச்சி திட்டங்களை வகுப்பதற்கும் வழிவகை செய்கிறது.

நகரப்பகுதிகளில் நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சியினை உறுதி செய்வதற்கும், குடியிருப்பவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் புதிய சாலைகள் அமைத்தல், சாலைகளை விரிவுப்படுத்துதல் மற்றும் இதர பணிகளுக்காக நிலம் மிகவும் அத்தியாவசியமாக இருக்கிறது.

மேற்கண்ட நோக்கங்களுக்காக தனியாரிடமிருந்து நிலத்தை கையகப்படுத்தும் முறை மிகவும் கடினமாகவும், அதிக பொருட்செலவை ஏற்படுத்துவதுடன் நீண்ட கால நடவடிக்கையாகவும் உள்ளது.

இந்தநிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான அத்தியாவசியமான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான நிலத்தை பெறுவதற்கு மேற்கண்ட இடர்பாடுகளை தவிர்க்க வளர்ச்சி உரிமைகள் மாற்றம் எனும் முறை ஒரு திறம்பட கருவியாக இருக்கிறது. மேலும் வளர்ச்சி உரிமைகள் மாற்றத்தின் கீழ் இழப்பீட்டு தொகை ரொக்கமாக அளிக்கப்படுவதில்லை.

இம்முறையின் கீழ் நிலத்தின் மதிப்பு கூடுவதற்கேற்ப அதன் மதிப்பும் கூடுவதற்கான சாத்தியமிருக்கிறது. உள்கட்டமைப்பு மேம்பாட்டு செயல்பாடுகளுக்காக நிலத்தினை கையகப்படுத்துவதற்கு வளர்ச்சி உரிமைகள் மாற்றம் ஒரு எளிமையான முறையாக இருக்கிறது.

இந்த திட்டத்தின்படி தனியார் நில உரிமையாளர்களிடம் இருந்து நிலத்தினை எடுத்துக்கொண்டு அதற்கு பதிலாக வளர்ச்சி உரிமைகள் வழங்கப்படும். நில உரிமையாளர்களால் ஒப்படைக்கப்பட்ட நிலத்திற்கு பதிலாக கூடுதலாக கட்டடப்பரப்பினை பெறுவதற்கு வளர்ச்சி உரிமைகள் மாற்றம் வழிவகை செய்கிறது.

மேலும், வளர்ச்சி பணிகள் உத்தேசிக்கப்பட்டுள்ள நிலத்தில் அனுமதிக்கப்பட்ட தளப்பரப்பு குறியீட்டை காட்டிலும் கூடுதலாக பெறுவதற்கு வளர்ச்சி உரிமைகள் மாற்றம் வழி வகை செய்கிறது.

நில உரிமையாளர்களுக்கு வளர்ச்சி உரிமம் சான்றிதழ் மூலம் வளர்ச்சி உரிமைகள் மாற்றம் அளிக்கப்படுகிறது. அதனை அவ்வுரிமையாளர்கள் தனது பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் அல்லது பிறருக்கு மாற்றம் செய்யலாம். வளர்ச்சி உரிமைகள் மாற்ற செயல்முறைக்கு சட்டப்பூர்வமான ஆதரவினை அளிக்கும் பொருட்டு இந்த சட்டத்தை திருத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்ட மசோதாவுக்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

தி.மு.க. உறுப்பினர் ரகுபதி இது குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:–

நிலங்களை கையகப்படுத்துவது இதுவரையில் வருவாய்துறையிடம் இருந்து, அதனை வீட்டுவசதி துறைக்கு மாற்றி இருக்கிறீர்கள். நிலம் கையகப்படுத்தும்போது விவசாயிகளுக்கு வாழை, தென்னைக்கு இழப்பீடு என்று அறிவித்தீர்கள். இப்போது வளர்ச்சி உரிமம் சான்றிதழ் என்று கூறுகிறீர்கள். இந்த சட்டத்தின் அடிப்படை நோக்கமே தவறு. இது எந்தவிதத்தில் நிலம் கொடுப்பவர்களுக்கு பலன் அளிக்கும். இதனை தி.மு.க. கடுமையாக எதிர்க்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உறுப்பினர் ரகுபதியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:–

எல்லோருக்கும் நாங்கள் வளர்ச்சி உரிமம் சான்றிதழ் வழங்கவில்லை. நில உரிமையாளர்கள் விருப்பப்பட்டால் மட்டும் தான் வழங்குகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நில ஒருங்கிணைப்பு வளர்ச்சி திட்டம் தொடர்பான சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:–

நில ஒருங்கிணைப்பு பகுதி வளர்ச்சி திட்டம் என்பது உரிய திட்ட அதிகார அமைப்பால் மேம்படுத்தப்பட்ட நிலங்களை உரிய திட்ட அதிகார அமைப்பிற்கு உரிமையாளரின் உரிமைகளை உரிமை மாற்றத்தின் மூலமாக தனி நபரால் அல்லது தனி நபர்களின் குழுவால் வைத்து வரும் நிலத்தில் உள்ள ஒரு திட்டம் மற்றும் அத்தகைய மேம்பாட்டு நிலத்தின் பகுதியை அசல் உரிமையாளர்களுக்கு உரிமை மாற்றம் செய்தல் மற்றும் அத்தகைய நிலத்தின் எஞ்சியுள்ள நிலத்தை பொது வசதிகளை மற்றும் சிறப்பு வசதிகளை, விற்பனைக்காக உருவாக்குவது என்று பொருள்படும்.

நில ஒருங்கிணைப்பு அல்லது நிலத்தை சீரமைப்பது என்பது வளர்ச்சி திட்டங்களில் நில உரிமையாளர்களை பங்குதாரர்களாக சேர்த்து அந்த திட்டங்களை செயல்படுத்த நிலங்களை ஒருங்கிணைக்கும் ஒரு வழியாகும். இந்த திட்டம் நிலம் கையகப்படுத்தும் நடைமுறைக்கு ஒரு மாற்றாக அமையும். தமிழ்நாடு விரைவு நகரமயமாகி வரும் மற்றும் தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலம். அதனால் உள்கட்டமைப்பு மற்றும் வீட்டு வசதிக்கான தேவை அதிகரித்து வருகிறது. எனவே சமூக பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும், அதன் வளர்ச்சிகளின் பயன்களை நில உரிமையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் தற்போது நடைமுறையில் இருக்கும் நில கையகப்படுத்தும் முறைக்கு மாற்றாக மாநிலத்தின் வளர்ச்சி பணிகளுக்கு தேவைப்படும் நிலங்களை பெறுவதற்கு நில ஒருங்கிணைப்பு பகுதி வளர்ச்சி திட்டத்தினை செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top