நீட் தேர்வை தமிழில் எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க மதுரை ஐகோர்ட் உத்தரவு

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்ணாக 196 மதிப்பெண்கள் வழங்க சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை 24 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தமிழ் வழி வினாத்தாளை தேர்வு செய்து எழுதினார்கள். தமிழில் மொழி மாற்றம் செய்த வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தன. எனவே அந்த வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண் வீதம் மொத்தம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க உத்தரவிட வேண்டும்“ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே சிபிஎஸ்இ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “நாடு முழுவதும் தேசிய தமிழ் வினாத்தாளில் தவறு இருப்பதாக மனுதாரர் கூறுவது சரியல்ல. தேர்வு நடத்துவது, தேர்வு முடிவெடுப்பது மட்டுமே சிபிஎஸ்இ வேலை. வினாத்தாள் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யும்போது தமிழ் வார்த்தைகள் சரியானதா என்பதை சிபிஎஸ்இயால் உறுதி செய்ய முடியாது.

தமிழில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடத்தை கற்பிக்கும் அனுபவமிக்க ஆசிரியர்களை வைத்தே ஆங்கில வினாத்தாள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்வதற்கு இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது. பிராந்திய மொழியில் உள்ள அகராதியை அடிப்படையாக வைத்தே மொழி பெயர்ப்பு பணிகளை ஆசிரியர்கள் மேற்கொண்டனர்” எனக் கூறப்பட்டிருந்தது.

அப்போது நீதிபதிகள், “தமிழக மாணவர்கள் பால் பாக்கெட், பேப்பர் போட்டு படிக்கின்றனர். இதுபோன்ற தவறு காரணமாக அவர்களின் மருத்துவ கனவு பாழாகிறது. வருங்கால சமுதாயத்தை நல்ல முறையில் கொண்டுச்செல்வது நமது கடமை. பீகார் மாநிலத்தில் தேர்வு எழுதியவர்களை விட தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக மனுதாரர் வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு சிபிஎஸ்இ என்ன பதில் சொல்லப்போகிறது.

தமிழில் மொழி பெயர்ப்பில் அதிக பிழைகள் உள்ளன. இந்த வினாத்தாள் எப்படி ஏற்கப்பட்டது. மேலும் இந்த வழக்கு தாக்கல் செய்த மறுநாள் தேர்வு முடிவு வெளியிட்டது ஏன்? இது தவறான முன்னுதாரணமாகும். நீட் தேர்வில் சிபிஎஸ்இ யாருடைய கருத்தையும் கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கிறது” என அதிருப்தியை வெளிப்படுத்தினர். பின்னர், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கில் நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு.இன்று தீர்ப்பு வழங்கியது . தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்ணாக 196மதிப்பெண்கள் வழங்க சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

அப்போது, நீதிபதிகள், “ஆங்கிலத்திலிருந்து தமிழில் கேள்விகள் மொழிமாற்றம் செய்யப்பட்டபோது பல்வேறு தவறுகள் நிகழ்ந்துள்ளன. இது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பு தவறாக இருந்த 49 கேள்விகளுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும். மதிப்பெண்கள் 2 வாரத்திற்குள் வழங்கப்பட்டு புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட வேண்டும்” என சிபிஎஸ்இக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், 2 வாரத்தில் மருத்துவ படிப்புக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால், சிபிஎஸ்இக்கு சிக்கல் எழுந்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top