தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல்; அனைத்துக் கட்சிகளும் ஆதரவு!

தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தியாவில் அரசுத் துறைகளில் நடக்கும் ஊழல்களை விசாரிக்கும் வகையில் கடந்த 2013-ம் ஆண்டு லோக்பால், லோக் ஆயுக்தா சட்டம் உருவாக்கப்பட்டது. சட்டம் 2014 ஜனவரி 16 முதல் அமலுக்கு வந்தது. நாட்டிலேயே முதன்முதலாக மகாராஷ்டிரா மாநிலத்தில் லோக் ஆயுக்தா ஏற்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பிஹார், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

தற்போது ஆந்திரா, கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட 17 மாநிலங்களில் லோக் ஆயுக்தா இயங்கி வருகிறது. ஆனால் தமிழகம், தெலங்கானா, மேற்கு வங்கம், ஒடிஷா, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் இன்னும் லோக் ஆயுக்தா சட்டத்தை இயற்றவில்லை. இந்நிலையில், இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில், லோக் ஆயுக்தா அமைப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஜூலை 10-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் (திங்கள்கிழமை) முடிவடைகிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் விதித்திருந்த காலக்கெடு செவ்வாய்க்கிழமை முடிவடைகிறது.எனவே, நடப்புக் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று லோக் ஆயுக்தா சட்டம் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டு உடனடியாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி இன்று கூடிய சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதாவை 2018 தமிழ்நாடு லோக் ஆயுக்தா என்ற பெயரில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். லோக் ஆயுக்தா மசோதாவுக்கு எந்தக் கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இந்த மசோதாவின் படி, ஊழல், முறைகேடு தொடர்பாக முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோர் மீது யார் வேண்டுமானாலும் ஆதாரங்களுடன் புகார் செய்யலாம். அந்தப் புகாரின் மீது, விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அவ்வாறு நடவடிக்கைக்கு உள்ளானோரின் பதவியைப் பறிக்கவும் லோக் ஆயுக்தா சட்டத்தில் வழிவகை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி கட்டாய ஓய்வு அளித்தல், சம்பளத்தை நிறுத்தி வைத்தல். பணிநீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் லோக் ஆயுக்தா சட்டத்தின் மூலம் மேற்கொள்ள முடியும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top