உலககோப்பை கால்பந்து போட்டி: 2-1 என்ற கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தியது பெல்ஜிய அணி

உலககோப்பை கால்பந்து போட்டியின் 2-வது காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது.

உலககோப்பை கால்பந்து போட்டிகள் முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ள நேரத்தில், 2-வது காலிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் 5 முறை உலக சாம்பியனான பிரேசில் அணி, பலம் வாய்ந்த பெல்ஜியம் அணியுடன் மோதியது. ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியானது இந்திய நேரப்படி இரவு 11.30 மணியளவில் துவங்கியது.

போட்டி துவங்கிய 13-வது நிமிடத்திலேயே மைதானத்தின் நட்டநடுவிலிருந்து பெல்ஜியம் வீரர் டி புருய்ன் பந்தை மிக அருமையாக ஃபெலானிக்குக் கொடுக்க டி-சர்க்கிளுக்கு வெளியே அவரால் சரியாக பந்தை கையாள முடியவில்லை. இருந்தாலும் அவர் ஷாட் கோலுக்கு வைடாகச் சென்றது. இதனால் ஒரு கார்னர் விளைந்தது.ஹசார்ட் கார்னர் ஷாட் பிரேசில் கோலுக்கு அருகில் தூக்கி விடப்பட அருகில் எந்த ஒரு பெல்ஜியம் வீரரோ, சிகப்புச் சட்டையோ கண்ணுக்குத் தெரியவில்லை. வந்த கார்னர் ஷாட்டிற்கு கேப்ரியல் ஜீஸஸ், பெர்னாண்டினியோ இருவரும் எம்பினர் பெர்னாண்டினியோ தலையால் முட்டித் தள்ள நினைத்தார் ஆனால் அது அவரது தோளில் பட்டு கோல் வலைக்குள் சென்றது. அருகில் ஒரு பெல்ஜியம் வீரர் கூட இல்லாத போது எதற்காக இப்படி ஒரு ஷாட்டை அவர் முயற்சி செய்ய வேண்டும் என்பது புரியாத புதிர். பிரேசிலின் செல்ஃப் கோலில் பெல்ஜியம் 1-0 என்று முன்னிலை பெற்றது.

தொடர்ந்து போட்டியில் பெல்ஜிய அணியே ஆதிக்கம் செலுத்த ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் கெவின் டே ப்ருன்னே தன் அணி சார்பாக மற்றுமொரு கோல் அடித்து அசத்தினார். கொண்டாட்டத்தின் உச்சத்திற்கு சென்ற பெல்ஜிய அணியை பழி வாங்கும் முனைப்பில் செயல்பட்ட பிரேசில் அணியின் ஆட்டம் முதல் பாதியில் பொய்த்து போனது.

தொடர்ந்து இரண்டாம் பாதியிலும் பிரேசில் அணிக்கு மிகப்பெரும் சவாலாக இருந்த பெல்ஜிய அணி வீரர்கள், பிரேசில் அணியினரின் கோல் அடிக்கும் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டனர். இந்நிலையில் ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் பிரேசில் அணி வீரர் ரெனாடோ அகஷ்டோ கோல் அடிக்க அந்நாட்டு ரசிகர்கள் சற்று மகிழ்ச்சியடைந்தனர். இதையடுத்து சுதாரித்து கொண்ட பெல்ஜிய அணி அற்புதமான முறையில் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டது. பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மாரும் ஆட்டத்தில் ஜொலிக்காதது அந்த அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த பெல்ஜிய அணி இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது.

இந்த ஆட்டத்தின் தன்மையை பிரேசில் பயிற்சியாளர் டிட்டே ரத்தினச்சுருக்கமாக இவ்வாறு கூறினார்:

“மிகவும் பிரமாதமான கால்பந்தாட்டம், இரு அணிகளும் பிரமிக்கத்தக்க உத்திகளைக் கொண்டு ஆடியது. இப்போது வலியுடனும், கசப்புடனும் நான் இருந்தாலும் ஒன்றைக் கூற விரும்புகிறேன், கால்பந்தாட்டத்தை விரும்புகிறீர்களா? இந்த ஆட்டத்தைத்தான் பார்க்க வேண்டும். உணர்ச்சிபூர்வமாக நாம் இதில் ஈடுபடாமல் பார்த்தோமானால் இன்றைய பிரேசில்-பெல்ஜியம் ஆட்டம் மிகச்சிறந்த ஆட்டம். முக்கோண பாஸ்கள். இடவல வல இட மாற்றங்கள், தடுப்பாட்டங்கள், கோல் தடுப்புகள், ஆஹா! என்ன ஒரு அழகான ஆட்டம்!”
ஆம். இப்படித்தான் இருந்தது இந்த ஆட்டம்!


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top