உலக கோப்பை கால்பந்து; பிரான்ஸ் அணி அர்ஜென்டினாவை 4-3 கோல் கணக்கில் வீழ்த்தியது

 

உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி 2-வது சுற்றில் 4-3 என்ற கோல் கணக்கில் இரண்டு முறை சாம்பியனான அர்ஜென்டினாவை விரட்டியத்து கால்இறுதிக்குள் நுழைந்தது.

,

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. 32 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் லீக் சுற்று முடிவில் 16 அணிகள் 2-வது சுற்றை (நாக்-அவுட்) அடைந்தன.

இந்த நிலையில் 2-வது சுற்றின் முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் அர்ஜென்டினாவும், பிரான்சும் கஜன் நகரில் நேற்று மோதியது . பிரான்ஸ் அணியில் 6 மாற்றங்கள் செய்யப்பட்டன. அர்ஜென்டினா அணியில் ஹிகுவைனுக்கு பதிலாக கிறிஸ்டியன் பவோன் சேர்க்கப்பட்டார்.

உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கிய ஆட்டங்களில் ஒன்றான இதில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக ஆடினர். 8-வது நிமிடத்தில் கிடைத்த ‘பிரிகிக்’ வாய்ப்பில் பிரான்ஸ் வீரர் கிரிஸ்மான் அடித்த ஷாட் கம்பத்திற்கு மேலாக பறந்தது.

13-வது நிமிடத்தில், பிரான்ஸ் வீரர் கைலியன் பாப்பே பந்துடன் தனிவீரராக களத்தின் நடுப்பகுதியில் இருந்து அர்ஜென்டினாவின் கோல் நோக்கி மின்னல் வேகத்தில் ஓடினார். அவரை பின்னால் துரத்திய அர்ஜென்டினா வீரர் மார்கஸ் ரோஜோ, பாப்பே கோலாக்கி விடுவாரோ என்ற பயத்தில் அவரை தள்ளிவிட்டார். அது கோல் பகுதி என்பதால் மார்கஸ் ரோஜோ மஞ்சள் அட்டை காட்டி எச்சரிக்கப்பட்டதுடன், பிரான்சுக்கு ‘பெனால்டி’ வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த பொன்னான ‘பெனால்டி’ வாய்ப்பை பிரான்ஸ் வீரர் கிரிஸ்மான் எளிதில் கோலாக்கினார்.

18-வது நிமிடத்தில் மறுபடியும் ஒரு முறை பிரான்ஸ் வீரர் பாப்பே கீழே இடறி விடப்பட்டார். இந்த முறை அவரை டாக்லியாபிகோ ‘பவுல்’ செய்து மஞ்சள் அட்டையை பெற்றார். ஆனால் அதிர்ஷ்டவசமாக கோல் எல்லையை விட்டு சற்று விலகி இந்த சம்பவம் நிகழ்ந்ததால் அர்ஜென்டினா ‘பெனால்டி’ ஆபத்தில் இருந்து தப்பியது.

பதிலடி கொடுக்க அர்ஜென்டினா வீரர்கள் களத்தில் வரிந்து கட்டி நின்றனர். பந்து அவர்கள் வசமே அதிகமாக சுற்றிக் கொண்டிருந்தது. 27-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் உம்டிடி பந்தை கையால் கையாண்டதற்கு அர்ஜென்டினா வீரர்கள் ‘பெனால்டி’ கேட்டனர். ஆனால் நடுவர் அதை கண்டுகொள்ளவில்லை.

சிறுசிறு உரசல்களுடன் பரபரப்பான நகர்ந்த இந்த ஆட்டத்தில் 41-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவுக்கு கோல் வாய்ப்பு கனிந்தது. சக வீரர் எவர் பனிகா தட்டிக்கொடுத்த பந்தை ஏஞ்சல் டி மரியா இடது காலால் 27 மீட்டர் தூரத்தில் இருந்து ஓங்கி உதைத்தபோது, அது கோல் வலைக்குள் புகுந்தது. இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.

இதையடுத்து பிற்பாதி ஆட்டத்தில் மேலும் அனல் பறந்தது. 48-வது நிமிடத்தில் ‘பிரிகிக்’ வாய்ப்பின் மூலம் வந்த பந்தை அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி இலக்கை நோக்கி உதைத்தார். அது அப்படியே சென்றிருந்தால் பிரான்ஸ் கோல் கீப்பர் ஹிகோ லோரிஸ் தடுத்து இருப்பார். ஆனால் குறுக்கே நின்ற மற்றொரு அர்ஜென்டினா வீரர் கேப்ரியல் மெர்காடோ சாதுர்யமாக பந்தை லேசாக திருப்பி விட்டார். அது அப்படியே கோலுக்குள் ஓடியது. ஆனால் அர்ஜென்டினா வீரர்களின் பூரிப்பு அதிக நேரம் நீடிக்கவில்லை.

பிரான்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து எதிரணியின் கோல் வலையை முற்றுகையிட்டனர். 55-வது நிமிடத்தில் கிரிஸ்மான் வலையை நெருங்கி வந்து பந்தை அடித்த போது, அர்ஜென்டினா கோல் கீப்பர் அர்மானி லேசாக தட்டிவிட்டதால் மயிரிழையில் பந்து வெளியே ஓடியது. ஆனாலும் அடுத்த 2-வது நிமிடத்தில் பிரான்சின் முயற்சிக்கு பலன் கிட்டியது. அந்த அணி வீரர் பெஞ்சமின் பவார்ட் அருமையாக ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமன் ஆனது.

இதன் பிறகு பிரான்ஸ் வீரர்கள் புத்துணர்ச்சி பெற்றது போல் கிளர்ந்தெழுந்தனர். அந்த அணியின் இளம் புயல் 19 வயதான கைலியன் பாப்பே, ஆரம்பம் முதலே எதிர்முகாமின் கோட்டைக்குள் சுலபமாக ஊடுருவி ‘தண்ணி’ காட்டினார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அவரது வேகத்துக்கு முட்டுக்கட்டை போட முடியாமல் அர்ஜென்டினா அணியினர் தடுமாறினர் என்று தான் சொல்ல வேண்டும். அர்ஜென்டினாவின் பின்கள பலவீனத்தை சாதகமாக பயன்படுத்தி 64-வது மற்றும் 68-வது நிமிடங்களில் அடுத்தடுத்து இரு கோல்களை பாப்பே அடித்து பிரமிக்க வைத்தார். இதன் பிறகு இரு கோல்கள் பின்தங்கியதால் அர்ஜென்டினா வீரர்கள் கொஞ்சம் நிலைகுலைந்து போனார்கள். அதே சமயம் பிரான்ஸ் வீரர்களின் தாக்குதல் தொடர்ந்து நீடித்தது.

வழக்கமான 90 நிமிடங்களுக்கு பிறகு காயம் உள்ளிட்ட விரயத்துக்காக 4 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. இந்த நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்சி தூக்கியடித்த பந்தை மாற்று ஆட்டக்காரர் செர்ஜியோ அகுரோ தலையால் முட்டி கோலாக்கினார். அந்த கோல் தோல்வியின் வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது.

திரிலிங்கான ஆட்டத்தின் முடிவில் பிரான்ஸ் அணி 4-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வெளியேற்றி கால்இறுதியை எட்டியது. இதன் மூலம் உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் கடந்த 40 ஆண்டுகளாக தென்அமெரிக்க நாடுகளுக்கு எதிராக தோற்றதில்லை என்ற பெருமையை பிரான்ஸ் தக்கவைத்துக் கொண்டது. பிரான்ஸ் அணி கால்இறுதியில் உருகுவே-வை சந்திக்கும்.

* பிரான்ஸ் வீரர் 19 வயதான கைலியன் பாப்பே, அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில் இரட்டை கோல் அடித்தார். 1958-ம் ஆண்டு பீலேவுக்கு பிறகு உலக கோப்பை போட்டியில் குறைந்த வயதில் இரட்டை கோல் அடித்தவர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.

* உலக கோப்பை போட்டிகளில் அர்ஜென்டினா அணி 4 மற்றும் அதற்கு மேல் கோல் விட்டுக்கொடுப்பது இது 5-வது முறையாகும்.

* இந்த ஆட்டத்தில் மொத்தம் 8 வீரர்கள் (அர்ஜென்டினா-5, பிரான்ஸ்-3) மஞ்சள் அட்டை எச்சரிக்கைக்கு உள்ளானார்கள். இதன் மூலம் உலக கோப்பையில் ஒரு ஆட்டத்தில் அதிக மஞ்சள் அட்டை காட்டப்பட்ட சாதனை (இதே உலக கோப்பையில் பனாமா-பெல்ஜியம் ஆட்டத்தில் 8 மஞ்சள் அட்டை) சமன் செய்யப்பட்டது.

* கிரிஸ்மான் கோல் அடித்த எந்த சர்வதேச போட்டியிலும் பிரான்ஸ் அணி தோற்றது கிடையாது. அவர் கோல் அடித்த 19 ஆட்டங்களில் 17-ல் வெற்றியும், 2-ல் டிராவும் கண்டுள்ளது.

*அர்ஜென்டினா வீரர் மெஸ்சி உலக கோப்பை போட்டிகளில் நாக்-அவுட் சுற்றில் ஒரு போதும் கோல் போட்டது கிடையாது. அதாவது மொத்தம் 756 நிமிடங்கள் நாக்-அவுட் சுற்றில் விளையாடிய அவரது கால்கள் ஒரு முறை கூட கோலை தரிசிக்கவில்லை.

கால்பந்து உலகில் புகழ்பெற்று விளங்கும் அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சி ஆண்டுக்கு சராசரியாக ரூ.741 கோடி சம்பாதிக்கக்கூடிய ஒரு வீரர். உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை 5 முறை பெற்றவர். பார்சிலோனா கிளப்புக்காக பட்டைய கிளப்பும் அவர் தேசிய அணிக்காக கால்பதிக்கும் போது சோபிப்பதில்லை என்ற விமர்சனங்கள் மீண்டும் ஒரு முறை உயிர்ப்பித்துள்ளது. இந்த உலக கோப்பை தொடரில் ஒரே ஒரு கோல் (நைஜீரியாவுக்கு எதிரான லீக் ஆட்டம்) மட்டுமே அடித்த மெஸ்சி, நேற்றைய நாக்-அவுட் சுற்றில் தடுப்பாட்டத்தில் ஒரு சில தருணங்களில் கோட்டை விட்டார். பிரான்ஸ் அணி கோலோச்சுவதற்கு அதுவும் ஒரு காரணமாகி விட்டது. தோல்வியை ஜீரணிக்க முடியாமல் மிகுந்த வேதனையுடன் அவர் நடையை கட்டினார்.

2014-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் தோல்வி, 2015, 2016-ம் ஆண்டு கோபா அமெரிக்கா தொடரில் இறுதி சுற்றில் வீழ்ச்சி என்று மெஸ்சிக்கு இதுவரை எந்த ஒரு பெரிய கோப்பையும் கிட்டியதில்லை. அந்த சோகம் இந்த முறையும் தொடர்ந்துள்ளது.

4-வது முறையாக உலக கோப்பையில் பங்கேற்ற 31 வயதான மெஸ்சி, உலக போட்டிகளில் ஒட்டுமொத்தத்தில் 6 கோல்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top