இலங்கை ராணுவத்தினரோடு நட்பு பாராட்டும் இந்திய ராணுவம்; வைகோ கண்டன அறிக்கை

 

இலங்கை ராணுவத்தினரோடு இந்திய ராணுவத்தினர் நெருக்கமான நட்பு பேணுவதை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக இன்று (புதன்கிழமை) வைகோ வெளியிட்ட அறிக்கையில், “லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள ராணுவத்திற்கு, இந்தியா பாராட்டுப் பத்திரம் வழங்குவதும் பரிசுகளை அள்ளி வழங்குவதும் தொடர்கதையாக நடக்கின்றது.

 

இரண்டு நாள்களுக்கு முன்பு, இந்திய அரசு, இந்திய விமானப் படையின் சிறப்பு விமானத்தை இலங்கைக்கு அனுப்பி, சிங்கள ராணுவத்தினர் 80 பேரை அழைத்துக் கொண்டு வந்து, புத்த கயா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

 

இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி, விபின் ராவத், நல்லெண்ணப் பயணம் என்று சொல்லிக் கொண்டு கொழும்புக்குச் சென்றபோது, சிங்கள ராணுவ தளபதி, லெப்டினண்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக வேண்டுகோள் விடுத்தாராம். அதை இந்தியத் தளபதி ஏற்றுக் கொண்டாராம். அதற்காகவே, சிறப்பு விமானத்தை அனுப்பி அவர்களை அழைத்து வந்துள்ளனர். அந்த ராணுவத்தினரும், அவர்கள் குடும்பத்தினரும், இந்திய விமானப் படையின் சி 17 குளோப் மாஸ்டர் என்ற விமானத்தில் இங்கே வந்துள்ளனர்.

 

2005 முதல் 2009 வரையிலும், சிங்கள ராணுவத்தினரோடு இந்திய ராணுவத்தினர் அடிக்கடிக் கொழும்பில் சந்தித்துக் கொண்டாடிக் கும்மாளம் போட்டதுபோல், பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் இன்னும் வீரியமாகத் தொடர்கின்றது.

 

இனப்படுகொலை செய்த சிங்களக் குற்றவாளிகளைத் தலைக்கு மேல் தூக்கி வைத்துப் பாராட்டும் இந்திய அரசை, மானத் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

 

தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு விதைக்கின்ற வினைகளுக்கெல்லாம், உரிய அறுவடையைக் காலம் தீர்மானிக்கும்” என வைகோ தெரிவித்துள்ளார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top