பசுமை சாலை திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்;திடீர் மறியல்: சேலத்தில் திமுகவினர் 400 பேர் கைது

 

பசுமை வழிச் சாலை திட்டத்தை கைவிடக் கோரி திட்டமிட்டபடி சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர். அக்கட்சி செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை அறிந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து திமுக எம்எல்ஏ உட்பட 400 பேரை போலீஸார் கைது செய்தனர்.

 

பசுமை வழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரி சேலத்தில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சி தலைமை அறிவித்திருந்தது. இதையடுத்து, நேற்று சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் மத்திய மாவட்ட செயலாளர் எம்எல்ஏ ராஜேந்திரன், மேற்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

திமுக தேர்தல் பணிக் குழு செயலாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் மாவட்ட திமுக மகளிரணி, விவசாய அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளைச் சேர்ந்த திமுக-வினர் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் சுப்புலட்சுமி ஜெகதீசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு நிலம் கையகப்படுத்தப்படும் சட்டத்தில் பல திருத்தங்களை செய்துள்ளது. விவசாயிகளிடம் எவ்வித கருத்தும் கேட்காமல் அவர்களது நிலம் கையகப்படுத்தப்படுகிறது. நில உரிமையாளர்களின் சம்மதமின்றி அவர்களது நிலத்தில் முட்டுக்கல் நடப்படுகிறது. இத்திட்டத்தின் மூலமாக மத்திய அரசு சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் விவசாயத்தை அழிக்கப் பார்க்கிறது.

 

தூத்துக்குடியில் மக்கள் ஒன்றிணைந்து போராடியதுபோல இங்கும் போராட வேண்டும். விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக திமுக இருக்கும். விவசாயத்தை அழிக்கும் இத்திட்டதை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

இதனிடையே, சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை அறிந்த திமுகவினர் எம்எல்ஏ ராஜேந்திரன் தலைமையிலும், வீரபாண்டி ராஜா, சிவலிங்கம் ஆகியோர் தலைமையிலும் டி.எம்.செல்வகணபதி தலைமையிலும் தனித்தனியாக மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர்.

 

ஆர்ப்பாட்டம் திடீரென மறியலாக மாறியதால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து, நகரின் வெவ்வேறு மண்டபங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top