சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்; 400-க்கும் மேற்பட்ட பேருந்து சேவை திடீர் நிறுத்தம்

 

தமிழ்நாட்டில் வாழ்வதே பெரும் சிக்கலாகும் போலிருக்கிறது.மிடில் கிளாஸ் மக்கள் போக்குவரத்துக்கு முழுவதும் நம்பி இருப்பது அரசு போக்குவரத்து கழகத்தைதான்.அதிலும் சமிபகாலமாக கட்டண உயர்வு மக்களை பெரிதும் பாதித்தது. இப்போது அடுத்த சிக்கல் வந்துவிட்டது சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் 400-க்கும் மேற்பட்ட பேருந்துகளின் சேவை திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

 

சென்னையில் தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதால், பேருந்துகளுக்காக மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மொத்தமுள்ள பேருந்துகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் தாங்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக பயணிகள் கூறுகின்றனர்.

 

இதுதொடர்பாக நடத்துநர்கள் சிலரிடம் கேட்டபோது, ‘‘காலாவதியான பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதேபோல், ஓட்டுநர், நடத்துநர்களின் பற்றாக்குறையும் அதிகரித்துவிட்டது. இதற்கிடையே, நஷ்டத்தை குறைப்பதாகக் கூறி, நேரத்தை வரையறை செய்து, ஒவ்வொரு பணிமனைக்கும் 5 முதல் 6 பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. இதனால், முழு அளவில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை” என்றனர்.

சிஐடியு பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் கூறும்போது, “அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஆட்கள் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. குறிப்பாக, மாநகர போக்குவரத்துக் கழகத்தில் மட்டும் ஆண்டுதோறும் சுமார் 800 பேர் ஓய்வு பெறுகின்றனர். ஆனால், கடந்த 2015-ம் ஆண்டுக்குப் பிறகு புதிய ஓட்டுநர்கள், நடத்துநர்கள் நியமனம் செய்யப்படவில்லை. சென்னையில் மட்டுமே சுமார் 2,000 ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுதவிர, போதிய பராமரிப்பு இல்லாததால், நூற்றுக்கணக்கான பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்படுகின்றன. எனவே, போதிய அளவில் ஆட்களை நியமித்து, புதிய பேருந்துகளை வாங்கி மக்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்” என்றார்.

இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மாநகரப் பேருந்துகளின் எண்ணிக்கையை எந்த வழித்தடத்திலும் குறைக்கவில்லை. சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் சில வழித்தடங்களில் கணிசமாக அளவுக்கு பேருந்து குறைக்கப்பட்டுள்ளது.

 

ஆனால், மக்கள் பாதிக்காத அளவுக்கு பேருந்துகளைத் தொடர்ந்து இயக்கி வருகிறோம். இருப்பினும், பயணிகள் புகார் குறித்து ஆய்வு செய்து, போதிய அளவில் பேருந்துகளை இயக்க கிளை மேலாளர்களுக்கு உத்தரவிடப்படும்’’ என்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top