தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு 30ஆம் நாள் நினைவு

 

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் படுகொலைசெய்யப்பட்டவர்களுக்கு  30ஆம் நாள் நினைவும் நீதியை நிறுவும் உறுதி ஏற்பு நிகழ்ச்சியும் சென்னை வாழ் தூத்துக்குடி, நெல்லை, குமரி மக்கள் ஒருங்கிணையம் சார்பில் சென்னையில் நடைபெற்றது.

 

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு பேசுகையில், தமிழக மக்களுக்கு மறதி அதிகம். பிரச்சனைகள் வரும் போது போராடுகிறோம். பின்னர் அடுத்த பிரச்சனை வந்தவுடன் இந்த பிரச்சனையை மறந்து விடுகிறோம். ஆங்கிலேய ஆட்சியின் போது குலசேகரபட்டினம் உப்பளத்தில் பணியில் இருந்த ஆங்கிலேயே உதவி ஆய்வாளர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். குரும்பூர் ரயில் நிலையம் தாக்கப்பட்டது. அப்போது கூட ராணுவம் வரவில்லை. மலபார் போலீஸ்தான் வந்தது. அவர்கள் கூட அடித்தார்களே தவிர யாரையும் சுட்டுக்கொல்ல வில்லை. ஆனால் சொந்த மக்களையே தாக்கக் கூடிய நிலை தூத்துக் குடியில் நடைபெற்றுள்ளது.இப்படிப் பட்ட சூழல் மாற ஆட்சி மாற்றம் போதாது. கொள்கை மாற்றம் வேண்டும் என்றார் அவர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் திட்டமிட்ட படுகொலை என்றார். போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டும் என்றால், 738 பக்கம் கொண்ட மெட்ராஸ் ஸ்டாண்டிங் ஆர்டரில் போராட்டக்காரர்கள் மீது ஸ்னைப்பர் போன்ற துப்பாக்கிகளை பயன் படுத்தக்கூடாது, அவர்களை கொலை செய்யும் நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் தூத்துக்குடியில் வாயில், தலையில், மார்பு பகுதியில் சுட்டார்கள் என்றால் கூட்டத்தை கலைப்பதற்காக அல்ல திட்டமிட்டு கொலை செய்யத்தான். 13 பேர் படுகொலைக்கு பிறகும் கூட அங்குள்ள அப்பாவி மக்களை தினசரி இரவு நேரங்களில் கைது செய்து வருகிறார்கள்.

சேலத்தில் பசுமை வழிச் சாலையை மக்கள், விவசாயிகள் எதிர்க்கும் நிலையில் அதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்த திருமண மண்டபங்களை வழங்கக் கூடாது என காவல் துறை மிரட்டுகிறது. தனியார் நிலத்தில் கூட்டம் நடத்த கூடினால் அங்கும் காவல் துறை வந்து விரட்டுகிறது. கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதற்காக அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் காவல் துறை ஈடுபட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் அரசை எதிர்ப்பவர்களை, விமர்சிப்பவர்களை, போராடுபவர்களை அச்சுறுத்தி ஒட்டுமொத்த ஜனநாயகத்தையும் ஒடுக்க மாநில அரசு முயற்சிக்கும் போது, ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கு, நிலைநாட்டுவதற்கு கட்சி வித்தியாசமின்றி, அமைப்பு வித்தியாசமின்றி அனைவரும் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும் என்று ராமகிருஷ்ணன் கூறினார்.

 

ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் பேசுகையில், ஒரே நாளில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வேறு எங்கும் நடந்ததில்லை. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கூட ஒரே நாளில் 13 பேர் இறக்கவில்லை. அப்படி அவர்கள் ஒரே நாளில் இறப்பதற்கான காரணம் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதுதான். ஆனால் அரசு போட்டிருக்கிற அரசாணை நீதிமன்றத்தில் நிற்காது. ஏனென்றால் இதுவரை ஒரு அரசாணை அரை பக்கத்தில் வந்தது கிடையாது. நீதிமன்றத்தில் சி.டி.செல்வம் தலைமையிலான இரண்டு நீதிபதிகள் அமர்வே நேரடியாக கூறிவிட்டது, இந்த அரசாணை போதுமானதல்ல, அரசு அமைச்சரவையிலும், சட்டசபையிலும் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என. சட்டம் என்ன சொல்கிறது யார் சுட்டார்களோ அவர்களே அதை புலன் விசாரணை செய்யக்கூடாது. இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்ற கண்காணிப் பின்கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். போராட்டத்தில் முன் நின்று போராடிய வாஞ்சிநாதன், அரிகரன் ஆகிய 2 வழக்கறிஞர்களின் முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுகிறது. காரணம் அவர்களும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். இதுபோல் பலரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது. எனவே 144, 41 ஆகிய சட்டங்களையே அகற்ற வலியுறுத்த வேண்டும்.இதற்கான மக்கள் இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்றார்.இந்த கூட்டத்தில் காங்கிரஸ், பாமக, மதிமுக, உள்பட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் உரையாற்றினர்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top