உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் திடீரென மரணமடைந்தார்.
உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்தியாவிலும் அனைத்து மாநில அரசுகள் சார்பிலும் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் வன ஆய்வு நிறுவனத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஏறக்குறைய 55 ஆயிரம் பேர் பங்கேற்று ஒரே நேரத்தில் யோகா செய்தனர்.
அப்போது, யோகா செய்து கொண்டிருந்தபோது, 73 வயதான மூதாட்டி திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து, முன்னெச்சரிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆம்புலென்ஸ் வாகனத்தின் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில் பலன்அளிக்காமல் அந்த பெண் உயிரிழந்தார்.
இது குறித்து டேராடூன் போலீஸ் எஸ்பி பிரதீப் ராய் நிருபர்களிடம் கூறுகையில், பிரதமர் மோடி பங்கேற்ற யோகா நிகழ்ச்சியில் முன்னெச்சரிக்கையாக ஆம்புலென்ஸ், மருத்துவர்கள் தயாராக வைக்கப்பட்டு இருந்தனர். அந்த பெண் திடீரென மயக்கமடைந்ததும் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், மருத்துவர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது சிறந்தது எனக் கூறியதையடுத்து அங்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் அந்தப் பெண் உயிரிழந்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். மருத்துவர்களின் அறிக்கைக்கு பின்புதான் அந்தப் பெண் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் எனத் தெரிவித்தார்.