தூத்துக்குடி துப்பாக்கி சூடு; சி.பி.ஐ. விசாரணை கோரிய வழக்கு ஐகோர்ட்டில் ஒத்திவைப்பு

 

தூத்துக்குடி கலவரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கேட்ட மனு மீதான விசாரணையை இன்று  ஐகோர்ட்டு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் நோக்கி நடைபெற்ற பேரணியில் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த பேரணியை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு 13 பேரை கொலை செய்த போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது

 

துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். தடியடியில் ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட 15 பேர் சி.பி.ஐ. விசாரணை கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதில், துப்பாக்கி சூடு, வன்முறை குறித்து, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தால் உண்மை நிலை வெளிவராது. சி.பி.ஐ. விசாரித்தால் தான் வழக்கின் உண்மை நிலை தெரியவரும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும்.எனவே சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த மனு நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு உள்ளதாகவும் அந்த வழக்குடன் இதுவும் சேர்த்து விசாரிக்கப்படும் என்றும் கூறிய நீதிபதிகள் விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top