எதிர்ப்பு கிளம்பியதால் 20 மொழிகளிலும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத பிரகாஷ் ஜவடேகர் உத்தரவு

 

கடும் எதிர்ப்பு கிளம்பியதால் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடைமுறையில், முன்பு இருந்ததுபோன்று இந்த ஆண்டும் தமிழ் உள்பட 20 பிராந்திய மொழிகளில் தேர்வை நடத்தும்படி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

 

மத்திய அரசின் பள்ளிகளான கேந்திர வித்யாலயா, டெல்லி மாநில பள்ளிகள், திபெத் பள்ளிகள் போன்ற தேசிய கல்வி முறைகளில் செயல்படும் பள்ளிகளில் பணிபுரிய தேசிய ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் நடத்தப்பட உள்ளது. இதில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் எடுப்பவர்களுக்கு தனி தேர்வாகவும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் எடுப்பவர்களுக்கு மற்றொரு தேர்வும் நடத்தப்படுகிறது.

இந்த தகுதி தேர்வில் மொழி அடிப்படையில் 2 தேர்வுகள் எழுத வேண்டும். முதல் பேப்பரை ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ஏதாவது ஒன்றில் எழுத வேண்டும். 2-வது பேப்பரை முதல் பேப்பரில் தேர்வு செய்த மொழி அல்லாத இன்னொரு மொழியில் எழுத வேண்டும்.

2-வது பேப்பரில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, வங்க மொழி உள்ளிட்ட 20 பிராந்திய மொழிகள் இடம் பெற்றிருந்தன. ஆனால், இந்த ஆண்டு தமிழ் உள்ளிட்ட 17 மொழிகள் இடம்பெறவில்லை. ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தேர்வர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

 

இதுபற்றி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். முன்பு இருந்ததுபோல் தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் தேர்வு நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார். முன்பு இருந்ததுபோல் 20 மொழிகளில் தேர்வு நடத்த ஏற்கனவே உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top