தெற்கு சூடான் வன்முறைகள்: எத்தியோப்பியாவில் இன்று அமைதிப் பேச்சுவாரத்தை!

south sudan peopleதெற்கு சூடானின் அதிபர் சல்வார் கிர்ரின் ஆதரவாளர்களுக்கும், அந்நாட்டின் முன்னாள் துணை அதிபர் ரீக் மச்சரின் விசுவாசிகளுக்கும் இடையே கடந்த டிசம்பரில் தொடங்கிய அதிகார மோதல்கள் வன்முறைக் கலவரங்களாக வெடித்தது.

இந்த வன்முறைகளால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானதுடன் லட்சக்கணக்கானோர் தங்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேற நேரிட்டது. வெகுஜனக் கொலைகள், பாலியல் அடிமைத்தனம், பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்கள் நடைபெறுவதற்கு இரு தரப்பினரையும் ஐ.நா குற்றம் சாட்டியுள்ளது.

நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள வீடுகள், மருத்துவமனைகள், மசூதிகள், தேவாலயங்கள், ஐ.நா அமைவிடங்கள் போன்றவற்றில் தொடர் அட்டூழியங்கள் நடைபெற்று வருவதை நேற்று ஐ.நாவின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இதற்குக் காரணமானவர்களை தங்கள் தவறுக்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கலவரங்களினால் பாதிக்கப்பட்டுள்ள ஐந்து மில்லியன் மக்களுக்கு உதவி தேவைப்படுகின்றது என்றும் ஐ.நா அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஜனவரியில் அதிபர் சல்வார் கிர்ருக்கும் எதிர்த்தரப்பு தலைவர் மச்சருக்கும் இடையே ஒரு அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அனால் இந்த ஒப்பந்தம் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரவில்லை. இதனைத் தொடர்ந்து எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவில் இன்று இரு தலைவர்களும் நேருக்குநேர் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். இந்த விவாதங்கள் அங்கு நடைபெறும் சண்டைகள் மற்றும் அதிகார பகிர்வுகளுக்கு ஒரு முடிவினை ஏற்படுத்தும் என்று கருதப்படுகின்றது.

இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தையில் இடைக்கால அரசாங்கம் பற்றி விவாதிக்கப்படாது என்றும், 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் வரை சல்வார் கிர்ரே அதிபர் பதவியில் நீடிப்பார் என்றும் தெற்கு சூடானின் வெளியுறவுத்துறை அமைச்சர் பர்னபா மரியல் பெஞ்சமின் பத்திரிகையாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

இருவருக்கும் இடையில் நடைபெறும் அதிகார மோதலைத் தீர்க்க பரந்த அடிப்படையில் ஒரு செயல்முறை உடன்பாட்டினை எட்டினால் அதுவே அமைதி முன்னேற்றத்திற்கான முதல் படியாக இருக்கும் என்று தெற்கு சூடானுக்கான அமெரிக்கத் தூதுவர் சூசன் பேஜ் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top