இலங்கை இந்து விவகாரத்துறை அமைச்சர் காதர் மஸ்தான் ராஜினாமா

 

 

இலங்கை இந்து விவகாரத் துறை துணை அமைச்சராக பதவி ஏற்ற காதர் மஸ்தான் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

 

இலங்கையில் இந்து விவகாரத் துறை துணை அமைச்சராக பதவி ஏற்ற காதர் மஸ்தான், இஸ்லாமியர் என்பதால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

 

இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையிலான சுதந்திர கட்சியும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. கடந்த 12-ம் தேதி புதிதாக 2 கேபினட் அமைச்சர்கள், 5 துணை அமைச்சர்கள் பதவியேற்றனர். இதில் வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான காதர் மஸ்தானுக்கு மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகார அலுவல்கள் துறை துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

 

அரசின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகளும், இந்து இயக்கங்களும் கண்டனம் தெரிவித்தன. யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இதுதொடர்பாக இந்து மத விவகார அலுவல்கள் துறை கேபினட் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கூறும்போது, “ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு அமைச்சர்களை மாற்றும்போது இதுபோன்று நேர்வது உண்டு. இதற்கு முன்பு மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்து மத விவகார துறை கேபினட் அமைச்சராக எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இருந்துள்ளார். அதேசமயம், தற்போதைய நடவடிக்கை இந்துக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் இருக்கும் என்பதால், காதர் மஸ்தான் பதவி ஏற்றுள்ள இந்து மத விவகார அலுவல்கள் பொறுப்பை மட்டும் நீக்கக் கோரி அமைச்சரவைக்கு கடிதம் அனுப்ப உள்ளேன்” என்றார். இதற்கிடையே காதர் மஸ்தான் நேற்று கூறும்போது, ‘‘இந்து மத விவகார அலுவல்கள் துறை துணை அமைச்சர் பதவியில் இருந்து மட்டும் ராஜினாமா செய்துள்ளேன்’’ என்றார். காதரின் முன்னோர்கள் ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியைச் சேர்ந்தவர்கள்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top