நீட் தேர்வு; அதிக மதிப்பெண் பெற்றவர்கள் அகில இந்திய ‘கோட்டா’வில் சேரவேண்டும்; மருத்துவர்கள் சங்கம்

 

தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் சேரும் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், ‘நீட்’ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், அகில இந்தியத் ஒதுக்கீடு இடங்கள் மூலம் சேர முன்வர வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 15 விழுக்காடு இடங்கள் அகில இந்தியத் தொகுப்பிற்கு (All India Quota) வழங்கப் படுகிறது.சென்ற ஆண்டு 456 இடங்கள் அகில இந்தியத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது. இந்த இடங்களில் வேறு மாநில மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்துவிடுகின்றனர்.

 

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தமிழக மாணவர்கள், அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்களை எடுக்க முன்வராமல், தமிழக அரசின் ஒதுக்கீட்டில் இடங்களை பெறுவதே இதற்குக் காரணம். இதனால் நீட் தேர்வில் சற்று குறைவான மதிப்பெண் பெற்ற தமிழக மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவ இடங்கள் கிடைக்காமல் போய்விடுகிறது.

 

இது தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும். தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் சேர்வதே தமிழக நலன்களுக்கு நல்லது. எனவே.நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ள தமிழக மாணவர்கள், அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் மத்திய அரசு நடத்தும் கவுன்சிலிங் மூலம் சேர்வதற்கு முன்வரவேண்டும்.

 

இதன் மூலம் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் இடம் பெற்றால்,வேறு மாநிலத்தவர், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் எண்ணிக்கை குறையும். அதே சமயம் மாநில அரசு நடத்தும் கவுன்சிலிங் மூலம் 85 விழுக்காடு இடங்களில் சற்று குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்கள் அதிக அளவில் இடம் பெற முடியும்.

 

எனவே,தமிழக மாணவர்கள் ,தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் அதிக அளவில் சேரும் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், ,அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் சேர முன்வர வேண்டும் .பெற்றோர்கள் அதை ஊக்கப்படுத்த வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது’’ என டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top